புதையல் ஆசையில் வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய ஐஸ் வியாபாரி: ஜோசியர் கூறியதை நம்பி ஏமாந்த பரிதாபம்

சென்னை: சோழவரம் அருகே புதையல் இருப்பதாக ஜோசியர் கூறியதால், தன் வீட்டில் ஐஸ் வியாபாரி ஒருவர் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டினார். இது குறித்து தகவலின் பேரில் வருவாய் துறையினர் எச்சரித்ததால் பள்ளத்தை மண் போட்டு மூடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.சோழவரம் அருகே கும்மனூர், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் புதையல் எடுப்பதற்காக 25 அடி ஆழத்தில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் அரிகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் விஏஓ அரிகிருஷ்ணன், ஞாயிறு பகுதி வருவாய் துறை அலுவலர் விமலா மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஐஸ் வியாபாரி மோகன் (62) என்பவரின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு வீட்டுக்குள் சுமார் 20 அடிக்கு மேல் 3 அடி அகலத்தில் ஒரு ராட்சத பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மோகனிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தனது வீட்டுக்குள் புதையல் இருப்பதாக ஒரு ஜோசியர் கூறினார். இதனால் புதையல் எடுப்பதற்காக பள்ளம் தோண்டியதாக மோகன் தெரிவித்தார். இதையடுத்து, “அப்பள்ளத்தை உடனடியாக மூடவேண்டும். இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது” என மோகனை வருவாய் துறை அதிகாரிகள் எச்சரித்தனர். பின்னர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், அப்பள்ளத்தை ஆட்களை வைத்து மோகன் மூடினார்.இதுகுறித்து வருவாய் துறை சார்பில் பொன்னேரி தாசில்தார் மற்றும் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஜோசியர் பொய் கூறி உள்ளார் என்பது பின்னர் தெரியவந்தது.

Related Stories: