உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஆதரவு?: ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில்  நடைபெறவிருக்கும் உள்ளாட்சி  தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார் நடிகர்  ரஜினிகாந்த் கடந்த 2017 டிசம்பரில் அரசியல் வருகை குறித்து அறிவிப்பு  வெளியிட்டார். இதை தொடர்ந்து கட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை  உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றினார். அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மன்ற  நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ரஜினி மக்கள் மன்றத்தின்  உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்தவும் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.  இதை தொடர்ந்து மன்ற உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்தும் பணியில்  நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம்  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. இந்த  தேர்தலில் ரஜினி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.  மேலும், அவர், சட்டசபை தேர்தல் தான் எங்கள் இலக்கு என்றும் அறிவித்தார். தொடர்ந்து  அவர், தற்போது, திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.  அவர், அவ்வப்போது கட்சி தொடர்பாக ஆலோசனையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல்  அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த தேர்தலில் ரஜினி ரசிகர்கள் போட்டியிடுவதா  இல்லை யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்பாக குழப்பத்தில்  இருந்தனர். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை  என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.

இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில்  நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ரஜினிகாந்த்  யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரிலோ,  ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரிலோ, மன்றத்தின் கொடியோ, தலைவரின் பெயரையோ,  புகைப்படத்தையோ பயன்படுத்தி வாக்கு சேகரித்தால் சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: