9 மாவட்டங்களில் தேர்தல் ரத்தால் மாவட்ட ஊராட்சி தலைவருக்கான இடஒதுக்கீட்டில் குளறுபடி: எஸ்சி, பெண்களுக்கான பதவியிடங்கள் குறைய வாய்ப்பு

சென்னை: புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எந்த மாவட்டத்துக்கு அந்த இடஒதுக்கீடு செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே முழுமையான வார்டு மறுவரையறை பணிகளை முடித்து தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27 மற்றும் 30ம் தேதி 31 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. அதேசமயம் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறைக்கு பிறகு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட இடஒதுக்கீடு பட்டியல் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட 31 மாவட்டங்களுக்கான அறிவிப்பாணையின்படி 10 பதவிகள் பொது பிரிவுக்கும், 12 பதவிகள் பொதுப்பிரிவு பெண்களுக்கும், 4 பதவிகள் எஸ்சி பிரிவினருக்கும், 4 பதவிகள் எஸ்சி பிரிவு பெண்களுக்கும், 1 பதவி எஸ்டி பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்டத்தின்படி  பெண்களுக்கு 16 பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தேர்தல் ஆணையம் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையின் படி 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள திருநெல்வேலி  மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி எஸ்சி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை திருநெல்வேலி மற்றும் தென்காசி என பிரித்துள்ளதால் எந்த மாவட்டத்துக்கு எஸ்சி பிரிவுக்கான இடஒதுக்கீடு செல்லும் என்ற சந்தேகம் இரண்டு மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதைப்போன்று  ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று இரண்டாக பிரித்ததால் எந்த மாவட்டம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்ற தகவலும் தெளிவாக கூறப்படவில்லை.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் 3 ஆகவும், விழுப்புரம் மாவட்டம் 2 ஆகவும் பிரிக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினரின்  எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அந்த மாவட்டம் எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெளிவாக விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 27 மாவட்டங்களுக்கு தனியாகவும், 9 மாவட்டங்களுக்கு தனியாகவும் நடத்தினால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும். எனவே அனைத்து மாவட்டங்களுக்கும் வார்டு மறுவரையறை முழுமையாக முடித்து இடஒதுக்கீட்டை அறிவித்த பின்புதான் தேர்தல் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி என பிரித்துள்ளதால் எந்த மாவட்டத்துக்கு எஸ்சி பிரிவுக்கான இடஒதுக்கீடு செல்லும் என்ற சந்தேகம் 2 மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>