ரிசாட்-2 பிஆர் 1 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி-சி 48 ராக்கெட் நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது

சென்னை: புவி கண்காணிப்பிற்காக ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி-சி 48 ராக்கெட் மூலம் நாளை மறுநாள் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.  இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, புவி கண்காணிப்பிற்காக அதிநவீன படங்களை எடுத்து அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைக்கோளை கடந்த மாதம் 27ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதனுடன் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 செயற்கைக்கோள்களும் திட்டமிட்டபடி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், புவி கண்காணிப்பிற்கு உதவும்  ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோளை ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி  ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை மறுநாள் மதியம் 3.25 மணிக்கு இஸ்ரோ  விண்ணில் ஏவுகிறது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் நாளை மதியம் தொடங்க வாய்ப்புள்ளது. இதேபோல், ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோளுடன் சேர்ந்து இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான 1 செயற்கைக்கோள்,  இத்தாலி நாட்டுக்கு சொந்தமான   1 செயற்கைக்கோள், ஜப்பான் நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைக்கோள் மற்றும்   அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள் என 9 வணிக ரீதியிலான செயற்கைக்கோள்களும்  விண்ணில் ஏவப்படுகிறது. ரிசாட்-2 பிஆர்1 செயற்கைக்கோள்  628 கிலோ எடைகொண்டது. செயற்கைக்கோள் விண்ணில் 576 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் மார்ச் மாதத்திற்குள் 13 திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: