பெண்களை குத்துவிளக்காக பார்க்காமல் கொள்ளிக்கட்டையாக எரிக்கிறார்கள்: கண்ணீர் மல்க பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை

சென்னை: பெண்களை குத்துவிளக்காக பார்க்காமல் கொள்ளிகட்டையாக எரித்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் பெண்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்படக்கூடாது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில் இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், டி.என்.பி.எஸ்.சி பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா நிகழ்ச்சி கோயம்பேட்டில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: மகாத்மா காந்தி நடு இரவில் பெண்கள் நகைகளோடு செல்லும் போது தான் உண்மையான சுதந்திரம் என்றார். ஆனால், இன்று புன்னகையோடு கூட செல்ல முடியவில்லை. பெண்களுக்கு உரிமை கொடுக்கிறோம் உரிமை கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு, பெண்களை குத்துவிளக்காக பார்க்காமல் கொள்ளிகட்டையாக எரித்து வருகிறார்கள். பெண்கள் மன உறுதியோடு வாழ வேண்டும்.

Advertising
Advertising

அவர்களுக்கு நகங்களும், பற்களுமே ஆயுதம். அவளை சீண்டினால் கடித்துக் குதறிவிடுவாள் என்ற பயம் எப்பொழுதும் ஆண்களுக்கு இருக்க வேண்டும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி. எனவே,  பெண்குழந்தைகளுக்கு எதிராக கருணையின்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு எதற்கு கருணை மனு.  பெண்கள் தற்காப்புக்  கலையை கற்றுக் கொள்ளுதல் அவசியம். ஆபாச படம் பார்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பது மிகவும் வெட்கக்கேடானது. நமது கடமைகளை  உணர்வோம். அதற்கு இந்த கல்வி துணை நிற்கும். இனிவரும் காலங்களில் பெண்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்படக்கூடாது எனக் கண்ணீர் மல்க பேசினார்.

Related Stories: