தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 6 மருத்துவக் கல்லூரிகளும் தனியாருக்கு போகிறதா?: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 6 மருத்துவக்கல்லூரிகளை நடத்தும் பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசு நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கும் 6 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு விரைவாக நாடு முழுவதும் மருத்துவமனைகளை மத்திய அரசு ஏன் துவங்குவதில் ஆர்வம் காட்டுகிறது என்ற கேள்வி மருத்துவ துறை வட்டாரத்தில் எழுந்தது. மத்திய அரசின் இந்த புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துவங்கும் திட்டம் என்பது மத்திய அரசின் சார்பில் 60 சதவீத நிதியுதவி, மாநில அரசு 40 சதவீத நிதியுதவி வழங்க வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அமைக்கப்படும் 6 மருத்துவக்கல்லூரிகளும் பிரைவேட் பப்ளிக் பார்ட்னர்ஷிப் (PPP) என்ற முறையில் திறக்கப்பட உள்ளது. அவ்வாறு திறக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் பல்வேறு பிரச்னைகள் எழும் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இது தனியாருக்கு ஆதரவாகவே இருக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மாநில அரசு கட்டிய கல்லூரியை ஆய்வு செய்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும். ஆனால் குறிப்பிட்ட 6 மருத்துவக்கல்லூரிகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இவ்வாறு  ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்கனவே குஜராத்தில் பூன்ச் மாவட்டத்தில் அதானி இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் என்ற கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு பூன்ச் மாவட்ட மருத்துவமனை 99 ஆண்டுகளுக்கு அதானி இஸ்ட்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதே போல், ஆந்திர மாநிலம் சித்தூர் அப்போலோ மருத்துவமனை சார்பில் அப்போலோ இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் தொடங்கப்படும் கல்லூரிகளில் முதல் பிரச்னை அந்த கல்லூரிகள், மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துமவனையாக செயல்பட போவதில்லை.

அது ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியாகவே செயல்படும். இதனால் ஏழை, எளிய நோயாளிகளுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உரிய சிகிச்சை கிடைக்காது. இதுதவிர பாஜக அரசு கொண்டுவந்துள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு முறை புகுத்தப்படும். இதனால் தமிழக அரசின் இடஒதுக்கீடு நடைமுறை பாதிக்கப்படும். அதனால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில் கல்லூரி தொடங்க தமிழக அரசு அனுமதிக்ககூடாது. இந்நிலையில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து சுகாதாரத்துறை தரப்பில் ரகசியம் காக்கப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளரை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை.

Related Stories:

>