காவிரியில் இருந்து கடந்த 6 மாதத்தில் தமிழகத்துக்கு 247 டிஎம்சி நீர் திறப்பு

சென்னை: காவியில் இருந்து கடந்த 6 மாதத்தில் தமிழகத்துக்கு 247 டிஎம்சி நீரை கர்நாடகா விடுவித்துள்ளது என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தவணை காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தவணை காலத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஆண்டுக்கு 177 டிஎம்சி நீர் தர வேண்டும். ஆனால், ஒப்பந்தப்படி முழுமையாக தண்ணீர் தந்ததில்லை. குறிப்பாக, கடந்த ஜூனில் 9.19 டிஎம்சியில் 2 டிஎம்சியும், ஜூலையில் 31.2 டிஎம்சியில் 7.4 டிஎம்சி மட்டுமே தந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் காவிரி ஆணையத்திடம் கர்நாடகா மீது புகார் அளித்தது.இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக கர்நாடகா அணைகள் நிரம்பியது. இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டது.

இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 45.95 டிஎம்சியில் 92.33 டிஎம்சியும், செப்டம்பரில் 36.7 டிஎம்சியில் 71.9 டிஎம்சியும், அக்டோபரில் 20.2 டிஎம்சியில் 48.7 டிஎம்சியும், நவம்பரில் 13.78 டிஎம்சியில் 23.9 டிஎம்சியும், டிசம்பர் 2ம் தேதி வரை 0.4 டிஎம்சியும் 1.23 டிஎம்சி தந்துள்ளது. இதுவரை ஒப்பந்தப்படி 157.6 டிஎம்சியில் 247.6 டிஎம்சி கொடுத்துள்ளது. கூடுதலாக 90 டிஎம்சி வரை தமிழகத்துக்கு தந்துள்ளது. ஆனால், இந்த தண்ணீரை சேமிக்க தடுப்பணை, புதிய அணைகள், நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு போன்ற கட்டமைப்புகள் இல்லை.இதனால், அந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இந்த தண்ணீரை சேமித்து வைத்து இருக்கும் பட்சத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்னை இருந்திருக்காது என்று மூத்த பொறியாளர்கள் சிலர் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் அடுத்து வரும் மாதங்களில் ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: