மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 311 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.88.97 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 311 மெட்ரிக் டன் வரையிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, ₹88.97 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம்  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்களை பயன்படுத்த, சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மூலம் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, வளசரவாக்கம் மண்டலம், கோட்டம்-143 முதல் 155 வரையுள்ள அனைத்து கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள் ஆகியோர் இணைந்து மூன்று தனிக்குழுக்கள் அமைத்து, நொளம்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, குன்றத்தூர் பிரதான சாலை, மதுரவாயல் மற்றும் போரூர் பகுதிகளில் அனைத்து வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், சாலையோர கடைகள் ஆகியவற்றில் கடந்த 5ம் தேதி 155 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய 14 நிறுவனங்களுக்கு ₹15,800 அபராதம் விதிக்கப்பட்டு, 9.5 கிலோ வரையிலான தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

Advertising
Advertising

மேலும், இந்த ஆய்வின்போது குன்றத்தூர் பிரதான சாலை, போரூரில் செயல்பட்டு வந்த சிட்டி ஸ்டைல் காலணி விற்பனை செய்யும் கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு  சென்னை மாநகராட்சி உரிமம் இல்லாத நிலையில் மாநகராட்சி அலுவலர்களால் கடை மூடி சீல் வைக்கப்பட்டது. வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31,773 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய  1,420 நிறுவனங்களுக்கு ₹10,97,200 அபராதம் விதிக்கப்பட்டு, 18 டன் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் 37,526 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ₹8.47 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, 60 டன் வரையிலான தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களில் நேற்று வரை 3,60,151 வணிக நிறுவனங்களில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட நெகிழிகள்  சுமார் 311  மெட்ரிக் டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் நெகிழிகள்  பயன்படுத்திய வணிக நிறுவனங்களிலிருந்து ₹88,97,600 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: