ஜிஎஸ்டி வரியை உயர்த்தக்கூடாது: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஜிஎஸ்டி வரியை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில் ஜிஎஸ்டி வரி 2017ம் ஆண்டு ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தொடக்கம் முதல் நடப்பாண்டின் முதல் பாதிவரை ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவாக ₹1.13 லட்சம் கோடியாக உயர்ந்த நிலையில், பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சம் கோடிக்கும் கீழாக குறைந்து விட்டது. இதனால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காகவே ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்படவுள்ளது.ஜி.எஸ்.டி வரிவிகிதம் மொத்தம் 3 நிலைகளில் உயர்த்தப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ₹ 1 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரியை உயர்த்துவது என்பது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானதாகும். நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிவடைந்ததற்கு முக்கியக் காரணம் அதிக ஜி.எஸ்.டி வரிவிகிதம் தான் என்பதை அனைவரும் அறிவர்.

பொருளாதார மந்தநிலை தென்படத் தொடங்கிய போது, அதை போக்குவதற்காக பெரு நிறுவனங்களின் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22% ஆக மத்திய அரசு குறைத்தது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பெருநிறுவனங்களுக்கு வரி குறைப்பு, சிறு நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வரி உயர்வு என்பது நல்ல பொருளாதாரக் கொள்கை அல்ல. இது சிறு தொழில்கள் மற்றும் வணிகத்தின் வீழ்ச்சிக்கு தான் வழிவகுக்கும். எனவே, ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை ஜிஎஸ்டி குழு கைவிட வேண்டும். மாறாக, வரி விகிதங்களை குறைத்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் மூலம் வருவாயைப் பெருக்க ஜி.எஸ்.டி குழு முன்வர வேண்டும். பொருளாதார மந்த நிலையைப் போக்கி, வளர்ச்சிப் பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல இந்த அணுகுமுறை தான் உதவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>