×

15 தொகுதிகளுக்கு இன்று ஓட்டு எண்ணிக்கை எடியூரப்பா ஆட்சி தப்புமா?:

* 8 பேர் வென்றால் தான் நீடிக்க வாய்ப்பு
* கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான்  எடியூரப்பா தலைமையிலான ஆட்சி தப்பும் என்ற சூழ்நிலை உள்ளதால், மாநில அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தது வந்தது. குமாரசாமி முதல்வராக பதவி வகித்தார். இந்நிலையில் கூட்டணி மீது இரு கட்சி எம்எல்ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருந்தனர். இதை பயன்படுத்தி கொண்ட பாஜ அவர்களை ஆபரேஷன் தாமரை மூலம் தங்கள் பக்கம் இழுத்தனர். இதனால் காங்கிரசை சேர்ந்த 14 எம்எல்ஏக்களும், மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.  இதையடுத்து குமாரசாமி ஆட்சி பெரும்பான்மை இழந்து கவிழ்ந்தது. இந்நிலையில் 17 பேரையும் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டதுடன் தேர்தலில் போட்டியிட தடை விதித்தார்.

இதைத் தொடர்ந்து 104 உறுப்பினர்கள் கொண்டு தனிப்பெரும் கட்சியாக விளங்கிய பாஜ சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தொகுதியில் மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய இரண்டு தொகுதிகள் தவிர 15 தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. இதில் போட்டியிட அனுமதி கோரி தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தகுதி நீக்க எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்தனர். இவர்களில் 14 பேருக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜ வாய்ப்பளித்தது.  15 தொகுதிகளில் டிசம்பர்  5ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த இடைத்தேர்தல் மஜத, காங்கிரஸ், பாஜ  ஆகிய கட்சிகளுக்கு மும்முனைப்போட்டியாக அமைந்துள்ளது.

பாஜ தனது ஆட்சியை  நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கவுரவப் பிரச்னையாகவே  இந்த இடைத்தேர்தல் அமைந்துள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 இடங்களில்  சட்டப்பேரவையில் பாஜ 105, காங்கிரஸ் 66, மஜத 34, பகுஜன் சமாஜ் கட்சி 1,  சுயேச்சை 1, சபாநாயகர் 1 என்ற பலத்தில் உள்ளது. இந்நிலையில் 15  தொகுதிகளில் 8 தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பா ஆட்சி தப்பிக்க முடியும். ஒருவேளை இடைத்தேர்தலில் பாஜ போதிய இடங்களில் வெற்றி  பெறாவிட்டாலும் மஜத ஆதரவளிக்கும் என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி  கூறியுள்ளார். ஆனால் 15 தொகுதிகளில் 13 இடங்களில் பாஜவுக்கு வெற்றி உறுதி  என்றும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்றும்  முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இந்த  சூழ்நிலையில், முக்கிய தலைவர்கள்  மற்றும் பாஜ சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் முதல்வர் எடியூரப்பாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையின் போது,  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர்களில் யார் யாருக்கு அமைச்சர் பதவி  அளிப்பது, யார் யாருக்கு எந்தெந்த துறை ஒதுக்குவது என்பது பற்றி ஆலோசனை  நடத்தியதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 12 மணிக்குள்  முடிவுகள் வெளியாகிவிடும். எனவே எடியூரப்பா ஆட்சி தப்புமா என்ற கேள்விக்கு  விடை கிடைத்துவிடும். இல்லாவிட்டால் மீண்டும் கர்நாடக அரசியலில்  பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Will Yeddyurappa ,constituencies , Will Yeddyurappa,rule, 15 constituencies ,today
× RELATED பொதுமக்கள் எதிர்பார்ப்பு 4...