தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக உள்ளது: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்...!

சென்னை: தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக உள்ளது என திமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் அறிவுரையை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27 மற்றும்  30ம் தேதி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு  மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 2ம் தேதி  மாநில தேர்தல் ஆணையர் அறிவித்தார். ஆனால், தமிழகத்தில் வார்டு வரையறை, இடஒதுக்கீடு சரியாக  பின்பற்றப்படவில்லை. 5 புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல் அறிவிப்பு முறைகேடாக உள்ளது என்று திமுக  சார்பில் உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 9  மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வார்டு வரையறை, இடஒதுக்கீடுகளை  சரியாக பின்பற்றி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும்,

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல்  தொடர்பாக வழங்கிய அறிவிப்பாணையை ரத்து செய்தும் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், 9 மாவட்டங்களை  தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 27  மற்றும் 30 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. திமுக ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் தேர்தலை நேரெதிரே சந்தித்து புதியதொரு சரித்திரம் படைத்திட திமுக தயாராக இருக்கிறது என திமுக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்றத் தேர்தல் எப்போது வந்தாலும்; “மக்கள் குரலே மகேசன் குரல்; மக்கள் என்றும் நம் பக்கமே” என்ற மகத்தான நம்பிக்கையுடன், தேர்தலை நேரெதிரே சந்தித்து, புதியதொரு சரித்திரம் படைத்திட தி.மு.கழகம் தயாராக இருக்கிறது. அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் காலத்தில் சமவாய்ப்பு உருவாக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு, தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும், அ.தி.முக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை நாடுவோம்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாடும்  மு.க.ஸ்டாலினின் கருத்து திமுக ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளது.  தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்பாணைக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. வார்டு மறுவரையறை,இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக, தேர்தல் வேண்டாம் என சொல்லவில்லை; சட்டப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று தான் சொல்கிறோம் என கூறியுள்ளது. மேலும், தேர்தல் எப்படியாவது தடைபட வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது எனவும் குற்றம் சாடினார்.

Related Stories:

>