×

கருமேனி ஆற்றில் வெள்ளம்: மணிநகரை புறக்கணிக்கும் பஸ்கள்: கிராம மக்கள் அவதி

சாத்தான்குளம்: கருமேனி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதையடுத்து உடன்குடி செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்று பாதையில் செல்லும் பஸ்கள் மணிநகரை புறக்கணிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் மணிநகரில் இருந்து உடன்குடி - திசையன்விளை செல்லும் சாலை தென் பகுதியில் மிக முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக உடன்குடி, திருச்செந்தூர். தூத்துக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு அரசு பஸ் உள்ளிட்ட இதர வாகனங்கள் சென்று திரும்புகின்றனர். இந்த சாலையின் குறுக்கே கருமேனி ஆறு செல்கிறது.

இந்த இடத்தில் தரை பாலம் இருந்தது. மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் செல்லும் போது ராமசாமிபுரம், அன்பின் நகரம், அடைக்கலாபுரம், மணி நகர், பிச்சிகுடியிருப்பு, சுண்டங்கோட்டை உட்பட சுமார் 20க்கு மேற்பட்ட கிராமம் மக்கள் உடன்குடி மற்றும் சுற்றுபுற கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர், பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலம் கட்டும் பணி துவங்கி பாதி நடந்த நிலையில் தற்போது ஆற்றில் வெள்ளம் செல்வதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உடன்குடியில் இருந்தும், திசையன்விளை, தட்டார்மடம், மணிநகர் வழியாக செல்லும் கிராம மக்கள் உதிரமாடன் குடியிருப்பு, படுக்கப்பத்து வழியாக சென்று வருகின்றனர்.

இந்நிலையில் உடன்குடியில் இருந்து செல்லும் அரசு பஸ்கள் மணிநகர் பஜாருக்கு செல்லாமல் படுக்கப்பத்து, காந்திநகர் வழியாக திசையன்விளைக்கு சென்று விடுகிறது. இதனால் ராமசாமிபுரம், மணிநகர், அன்பின்நகரம், அடைக்கலாபுரம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் பஸ் வசதி இல்லாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர். அவசர தேவைக்கு தனியார் வாகனங்களுக்கு கூடுதல் வாடகை கொடுத்து தங்களது ஊர்களுக்கு செல்கின்றனர். குறிப்பாக கிராங்களில் இருந்து உடன்குடி பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கிராம மக்கள் தாசில்தார், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததன் பேரில் சில பஸ்கள் மணிநகர் வந்து படுக்கபத்து பகுதிக்கு செல்கிறது.

தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மணிநகரை புறக்கணித்து காந்திநகர் வழியாக சென்று விடுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராமசாமிபுரம் பத்திரகாளி அம்மன் தசரா குழு செயலாளர் தமிழ்வீரன் கூறுகையில், மணிநகர் கருமேனி ஆற்றில் தற்காலிக பாதை தண்ணீர் வடிந்து செல்லும் அமைக்கப்படாமல் அமைக்கப்பட்டதால் அந்த சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நிலைபாட்டை அறிந்து அதிகாரிகள் அந்த சாலையை மணல் கொண்டு மறித்து வைத்துள்ளனர். இதனால் எந்தவிதமான வாகனங்களும் செல்ல முடியாமல் உள்ளது.

ஆதலால் அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து மணிநகர் ஆற்றில் தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் குழாய் அமைத்து உடனடியாக மாற்றுப்பாதை அமைத்து போக்குவரத்து தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். உடன்குடியில் இருந்து உதிரமாடன் குடியிருப்பு வழியாக செல்லும் அரசுபஸ் மணிநகர் பகுதி வந்தும், திசையன்விளையில் இருந்து வரும் பஸ்களும் மணிநகர் பகுதிக்கு வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் 20 கிராமமக்களும் இணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Tags : Floods ,Karumani River ,Village people ,Maninagar ,Mannar Overlooking Buses , Karumeni, the river flooded
× RELATED நிவர் புயலால் விடிய விடிய விடாமல்...