×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளை கண்காணிக்க லேசர் சென்சார் சிக்னல் கருவி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறுவதை கண்காணித்து செல்போனிற்கு குறுந்தகவல் அளிக்கும் லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் 15 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக யானைகள் வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த 3 பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். முதற்கட்டமாக பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகளை பொருத்தினர்.

இதில் சூரிய ஒளியில் இயங்கும் சோலார் தகடு மூலம் மின்கலனில் லேசர் சென்சார் கருவி, ரிசீவர் மற்றும் டிரான்ஸ்மீட்டர் உள்ளன. சிறிய விலங்குகளான மான் மற்றும் காட்டுப்பன்றி கருவிகளுக்கிடையே கடக்கும்போது அவைகளை கண்டறிய அதன் உயரத்திற்கு ஒரு சென்சாரும், யானை போன்ற பெரிய விலங்குகள் கடக்கும்போது அதன் உயரத்தில் ஒரு சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் விலங்குகள் வரும்போது சென்சார் சிக்னல் கருவி கண்டறிந்து வனத்துறை அதிகாரிகளின் செல்போனிற்கு குறுந்தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்னோட்டமாக யானை உள்ளிட்ட வனவிலங்குள் இப்பகுதியில் கடந்தபோது லேசர் சென்சார் சிக்னல் கருவியிலிருந்து வனத்துறையினர் மற்றும் விவசாயிகளின் செல்போனிற்கு குறுந்தகவல் சென்றது. இதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் வனச்சரகம் மற்றும் ஜீரஹள்ளி வனச்சரகத்தில் யானைகள் வனத்தை விட்டு வெளியேறும் பகுதியில் 15 இடங்களில் லேசர் சென்சார் சிக்னல் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

Tags : Satyamangalam ,Tiger Reserve , Sathiyamangalam, Tiger Reserve, Wildlife Laser Sensor Signal Tool
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...