×

தர்மபுரியில் மகசூல் அதிகரிப்பு: நிலக்கடலை படி ரூ40க்கு விற்பனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை கைகொடுத்ததையடுத்து நிலக்கடலை மகசூல் அதிகரித்ததால் படி ரூ40க்கு விற்பனையாகிறது. தர்மபுரி  மாவட்டத்தில் தர்மபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி,  காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி உள்பட 8 ஒன்றியங்களிலும் அதிகளவில்  சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்து பயிர் நிலக்கடலையாகும்.  தர்மபுரி மாவட்டத்தில் நிலக்கடலை தென்மேற்கு பருவமழையை நம்பி வைகாசி  பட்டத்தில்(மே மற்றும் ஜூன் மாதங்களில்) நடவு செய்யப்படும். இதேபோல்,  வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபர், நவம்பர் மாதத்தில் கார்த்திகை  பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும். மாவட்டம் முழுவதும்  மானாவாரியாக நிலக்கடலை சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகமாக  பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால், கடந்த சில நாட்களாக  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை அறுவடை முழுவீச்சில் நடந்து  வருகிறது. நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட இண்டூர் அருகே அக்ரஹாரம்  பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது.  நேற்று அக்ரஹாரம் பகுதியில் நிலக்கடலை அறுவடை நடந்தது. நடப்பாண்டில்  பருவமழை காரணமாக ஏக்கருக்கு சுமார் 7 மூட்டை அளவிற்கு மகசூல் கிடைத்துள்ளது.  கடந்த மாதம் வரை படி ரூ50 வரை விற்பனையான நிலக்கடலை தற்போது தர்மபுரி  சந்தையில் ரூ40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Dharmapuri ,groundnut sale , Dharmapuri, groundnut, sales
× RELATED தருமபுரி அருகே எரிந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு.: போலீசார் விசாரணை