நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை: சோனியா காந்தி அறிவிப்பு

டெல்லி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களை கண்டிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளை தனது பிறந்த தின கொண்டாட்டங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.1998 ம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்து வந்தார். பின்னர் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இதனிடையே 2019 மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், சோனியா மீண்டும் இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் ஹைதராபாத், உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களில் சமீப காலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து காங்., சார்பில் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அரசின் கொள்கைகள், பொருளாதார சரிவு உள்ளிட்டவைகளை கண்டித்து டிச.,14-ம் தேதி அனைத்து மாநிலங்களும் கண்டன பேரணி நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காங்., வரலாற்றில் கட்சியின் நீண்ட கால தலைவராக இருக்கும் சோனியாவிற்கு நாளை பிறந்தநாள். சோனியா காந்தியின் 73-வது பிறந்த தினமான நாளைய தினத்தைக் கொண்டாட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் காங்கிரஸ் சார்பில் செய்யப்பட்டிருந்தன.இந்நிலையில் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில்; நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், அவர்கள் தீவைத்து எரிக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருவதால் சோனியா மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார். அதனால் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: