அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. சோஹா ராக்கெட் ஏவுதளத்தில் மிக முக்கிய சோதனை நடத்தப்பட்டதாக வடகொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் ஏவுகணைகளையே வடகொரியா சோதித்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தென்கொரியாவுடன் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது சோஹா ஏவுதளத்தை வடகொரியா மூடியது. தற்போது அதே இடத்தில் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது அணுஆயுதம் தொடர்பான அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே காட்டுகிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஏவுகணை சோதனை குறித்து தென் கொரியா அறிவித்துள்ளது. மேலும் இந்த ஏவுகணை சோதனை நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோஹா ராக்கெட் ஏவுதளம் வடகொரியா , சீன எல்லையில் உள்ளது.