பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உருக்கம்

சென்னை: பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஹைதராபாத், உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களில் சமீப காலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வாணியர் பேரவை சார்பில் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழிசை பங்கேற்றார். அப்போது பேசிய அவர்; தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார்.

சமுதாயத்தில் பெண்களை குத்துவிளக்கு என்று கூறிக்கொண்டு கொள்ளிக்கட்டையாக்குகிறார்கள் என்று கவலையுடன் குறிப்பிட்டார். புன்னகையுடன் ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்புகிறாள் என்றால் அது நடக்காத விஷயமாக இருக்கிறது. பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பதைப் போல, ஆண் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக வளர வேண்டிய சூழ்நிலை தாண்டி, ஒரு ஆண் பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என கற்றுத்தந்து ஆண்களை வளர்க்க வேண்டும். தயவு செய்து பெண்களை பூத்து குலுங்க விடுங்கள், மொட்டுகளை கனிய விடுங்கள் அதனை ஆரம்பத்திலேயே கசக்கி எறிந்து விடாதீர்கள்.

பெண்கள் அடுப்பு முன்பு வேகக்கூடாது என்பதற்காக பிரதமர் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் பெண்களையே எரித்து உள்ளனர். கருணையே இல்லாதவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என கூறினார். மேலும் பேசிய அவர்; ஆபாசப் படங்கள் பார்ப்பதில் தமிழ்நாடு முதலிடம் என்று வரும் தகவல் பெரும் வேதனை அளிக்கிறது. இவற்றின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக கூறியுள்ளார்.

Related Stories:

>