வரத்து குறைந்ததால் வத்தல் மிளகாய் கிலோவுக்கு ரூ50 உயர்வு

சேலம்: வரத்து குறைந்ததால், வத்தல் மிளகாய் கிலோவுக்கு ரூ50 வரை உயர்ந்துள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மிளகாய் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் மிளகாய், இந்தியா முழுவதும் பல்ேவறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஆந்திரா, மகாராஷ்டிராவில் மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு வழக்கத்தை விட, வத்தல் மிளகாய் வரத்து சரிந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் விளாத்திகுளம், கொளத்தூர், சாத்தூர், விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திராவில் குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிளகாய் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

வட மாநிலங்களில் பெய்த கனமழையால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தை காட்டிலும் 30 சதவீதம் வரத்து சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக, வத்தல்மிளகாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த இரு மாதத்திற்கு முன்பு முதல் ரகம் ரூ130க்கு விற்ற ஒரு கிலோ வத்தல் மிளகாய், படிப்படியாக கிலோவுக்கு ரூ50 உயர்ந்து, நேற்று நிலவரப்படி ரூ180 என விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் ரகம் ரூ150 எனவும், மூன்றாம் ரகம் ரூ130 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் ஜனவரி, பிப்ரவரியில் புது மிளகாய் விற்பனைக்கு வரும்போது கிலோ, ரூ100 வரை என விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>