டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி: காயமடைந்தவருக்கு ரூ.50,000...பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். டெல்லி ராணி ஜான்சி சாலை, அனஜ் மண்டி பகுதியில் உள்ள  தொழிற்சாலையில் அதிகாலை 5.22 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதலில் 35 பேர் உயிரிழந்தனர். தீயை அணைக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட  தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள்  தீவிரமாக ஈடுபட்டனர். மருத்துவமனையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 43 உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertising
Advertising

மீட்கப்பட்டவர்கள் எல்என்ஜேபி, ஆர்எம்எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50,000  வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் ரூ.10 லட்சம் அறிவிப்பு:  

இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்ட பகுதியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை பார்வையிட்டார். விபத்து எப்படி ஏற்பட்டது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை  நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். தீக்காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள்  குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ரூ.5 லட்சம் அறிவிப்பு:

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை டெல்லி வடகிழக்கு பாஜக எம்.பி., மனோஜ் திவாரி பார்வையிட்டார். இது ஒரு சோகமான சம்பவம் என்றார். தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5  லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.25000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: