இராக்குக்கான புதிய பிரதமர் வெளிநாடுகளின் தலையீடு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்: இராக் மத குரு வலியுறுத்தல்

இராக்: இராக்கின் புதிய பிரதமர் வெளிநாடுகளின் தலையீடு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மூத்த ஷியா மத குருவான அயத்துல்லா அலி அல் சிஸ்தானி தெரிவித்துள்ளார். இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள கலானி சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பற்றிய முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. அக்டோபர் மாதம் முதல் இராக்கில் நடக்கும் போராட்டத்தில் 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதன் காரணமாக இராக்கின் ஷியா மதகுருமார்கள் இராக் பிரதமர் மஹ்தி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக இராக் பிரதமர் அதில் அப்துல் மஹ்தி அறிவித்தார். அப்துல் மஹ்தியின் ராஜினாமாவை இராக் நாடாளுமன்றமும் ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில் இராக்கில் நடக்கும் வன்முறைக்கு இராக்கின் மூத்த ஷியா மதகுருவான அயத்துல்லா அலி அல் சிஸ்தானி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிஸ்தானி கூறியதாவது, போராட்டக்காரர்கள் வன்முறையாக மாற்றாத வழியில் போராட்டத்தை தொடர வேண்டும். மேலும் இராக்குக்கான புதிய பிரதமர் வெளிநாடுகளின் தலையீடு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: