விலை ஏற்றம் எதிரொலி: தமிழகத்தில் 6,000 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை...அமைச்சர் காமராஜ் பேட்டி

மன்னார்குடி: வெங்காய விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரக்கூடிய வெங்காயம் வரத்து சரிந்துள்ளது. இதனால்  தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.170க்கும், சாம்பார் வெங்காயம் விலை கிலோ ரூ.170க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்துக்கு. 70 லாரிகளில் தினமும் கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக வெறும் 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் விற்பனைக்கு வந்தது. வெங்காயத்தின் விலை உயர்வு எதிரொலியாக உணவகங்களில் வெங்காயம்  பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், எகிப்து, துருக்கி நாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின் வெங்காயம் விலை  கட்டுக்குள் வரும் எனவும் தெரிவித்தார். மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது நிரந்தரமான விலையேற்றமாக இருக்கக்கூடிய பொருள்  அல்ல எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறும் எனவும் அதில் அதிமுக தலைமையிலான கூட்டணி  வெற்றி பெறும் எனவும் அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார்.

Related Stories: