குழந்தை மர்ம சாவில் திடீர் திருப்பம் தாயின் கள்ளக்காதலன் கொன்றது அம்பலம்: பரபரப்பு வாக்குமூலம்

வேளச்சேரி: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி கங்கா (28). கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மகன் அருண் (3). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சத்தியமூர்த்தி இறந்து விட்டார். இதையடுத்து, பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட மேஸ்திரி வெங்கடேசன் (35) என்பவருடன், கங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். பின்னர், கடந்த 5 மாதத்துக்கு முன் இருவரும் சென்னை வந்து, மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் சங்கரா நகர் 4வது அவென்யூவில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்தனர்.

Advertising
Advertising

கடந்த சில நாட்களுக்கு முன், கங்கா கேரளாவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார். அப்போது, தனது மகனை வெங்கடேசனிடம் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை அருணுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, வெங்கடேசன் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதுபற்றி கங்காவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் அவசர அவசரமாக சென்னை புறப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர்கள், ‘‘குழந்தை என்ன சாப்பிட்டது,’’ என கேட்டபோது, முறையாக பதிலளிக்காத வெங்கடேசன் சிறிது நேரத்தில் அங்கிருந்து மாயமானார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு குழந்தை இறந்தது. இதை பார்த்து கங்கா கதறி அழுதார்.

பின்னர், வெங்கடேசனை தொடர்பு கொண்டபோது, அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு, தலைமறைவானது தெரிந்தது. இதனால், சந்தேகமடைந்த கங்கா, குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், குழந்தை அருண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான வெங்கடேசனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. வெங்கடேசன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் போலீசாருக்கு வெங்கடேசன் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், வெங்கடேசன் செல்போன் சிக்னல் கிடைத்தது. அதை வைத்து ஆய்வு செய்தபோது, வெங்கடேசன் கள்ளக்குறிச்சியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் கள்ளக்குறிச்சி சென்று வெங்கடேசனை நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர் அவரை பள்ளிக்கரணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, வெங்கடேசன் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கங்காவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பதால், எனக்கு அந்த குழந்தையை ஆரம்பத்தில் இருந்து பிடிக்கவில்லை. நாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு இந்த குழந்தை இடையூறாக இருந்ததால் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று  நான் மது போதையில் இருந்தேன்.

அப்போது குழந்தை அருண் திடீரென மாயமானான். அவனை தேடி சென்றபோது, பக்கத்து வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் அங்கு சாப்பிடுவது எனக்கு பிடிக்கவில்லை. அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். நானும், கங்காவும் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்ததால் ஏற்கனவே குழந்தை மீது வெறுப்பில் இருந்த நான், ஆத்திரத்தில் காலால் வேகமாக எட்டி உதைத்தேன். இதில் குழந்தையின் தலை தரையில் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கியது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அனுமதித்தேன். அங்கு மருத்துவர்கள் சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதால், அங்கிருந்து தலைமறைவானேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: