சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து 25 பேர் படுகாயம்: 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், முன்னால் ெசன்ற கார் மீது மோதாமல் இருக்க திரும்பியபோது கட்டுப்பாடு இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 25 பேர் படுகாயமடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று 35 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று திருச்சி புறப்பட்டது. பஸ்சை பெரம்பலூரை சேர்ந்த டிரைவர் ஆண்டி (50) என்பவர் ஓட்டினார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றபள்ளி பைபாஸ் சாலை அருகே பஸ் சென்றபோது, முன்னால் சென்ற கார் திடீரென நின்றதால், அதன் மீது மோதாமல் இருக்க பஸ் டிரைவர் வலது பக்கமாக திருப்பினார்.

இதனால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில்  மோதி சாலையின் குறுக்கே பயணிகளுடன் தலைகீழாக  கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. பலர் வலி தாங்க முடியாமல் அலறினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இதில் பஸ் டிரைவர் ஆண்டி (50), செய்யூர் அடுத்த புத்திரன்கோட்டையை சேர்ந்த   பஸ் நடத்துனர் சிகாமணி (45), சென்னை செயின்ட் தாமஸ் மலை காவல் நிலைய ஆயுதப்படை காவலர்  திண்டுக்கல்லை சேர்ந்த அழகுராஜா (30), பெரம்பலூரை சேர்ந்த ஜெகநாதன் (45), ஜெசி அமலாமேரி (40) உள்ளிட்ட 25 பயணிகள்  பலத்த காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான பஸ் சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்து கிடந்ததால்,  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு டி,எஸ்,பி.கந்தன் தலைமையிலான போலீசார் நீண்ட நேரம் போராடி விபத்துக்குள்ளான பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: