டிசம்பர் 26ம் தேதி சூரிய கிரகணம் சூரியன் நெருப்பு வளையமாக மாறும்: வெறும் கண்களால் பார்க்கக்கூடாது

சென்னை: டிசம்பர் 26ம் தேதி  நடைபெறும் சூரிய கிரகணத்தின்போது சூரியன் நெருப்பு வளையமாக மாறும் என்று தமிழ்நாடு அறிவியல் மைய அதிகாரிகள் கூறினர். சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வருவது சூரிய கிரகணம் ஆகும். டிசம்பர் 26ம் தேதி 8.30 மணி முதல் 11.30 மணி வரை 3 மணி நேரம் இந்த சூரியகிரகணம் நீடிக்கும். அப்போது சூரியன் பார்ப்பதற்கு ஒரு நெருப்பு வளையம் போல் தெரியும். இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் மைய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் 2010ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரிய கிரகணம் தெரிந்தது. அதைத்தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கு பின் இந்த கிரகணம் நிகழ்கிறது.

புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் மேகமூட்டம் இல்லாத நிலையில் தெளிவாக தெரியும். பிற மாவட்டங்களில் முழுமையடையாத நெருப்பு வளையமாக தெரியும். கிரகணம் தொடங்கியதும், சூரியனில் மேற்கிலிருந்து கிழக்காக ஒரு நிழல் பரவும். சரியாக காலை 9.31 மணிக்கு முழுமையாக மறைக்கும். இதை வெறுங்கண்களால் பார்க்கக்கூடாது. இதை பார்ப்பதற்கு மாவட்ட வாரியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சிறுவயதில் உருவத்தை பெரிதாக்கி காட்டும் லென்ஸ், பிற சாதனங்கள் மூலம்  வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பான முறைகளை பின்பற்றி சூரிய கிரகணத்தை பார்க்கலாம். வெறும் கண்களால் பார்ப்பது  கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அரிய நிகழ்வை பதிவு செய்ய வானியல் ஆர்வலர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கடுத்தபடியாக 2034ம் ஆண்டு தான் இதே போன்றதொரு சூரியகிரகணம் பார்க்க முடியும். இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் மைய அதிகாரிகள் கூறினர்.

Related Stories:

>