×

திருவனந்தபுரத்தில் இன்று 2வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?

திருவனந்தபுரன்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தலா 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. அந்த போட்டியில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்தது. எவின் லூயிஸ் 40, பிராணன் கிங் 31, ஹெட்மயர் 56, கேப்டன் போலார்டு 37, ஹோல்டர் 24*, ராம்தின் 11 ரன் விளாசினர். இந்திய பந்துவீச்சில் சாஹல் 2, சுந்தர், ஜடேஜா, தீபக் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 208 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 2-9 ரன் எடுத்து சாதனை வெற்றியை பதிவு செய்தது. ரோகித் 8, கே.எல்.ராகுல் 62, ரிஷப் பன்ட் 18, ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடிய கேப்டன் கோஹ்லி 94 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), ஷிவம் துபே (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

விராத் கோஹ்லி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஐதராபாத் போட்டியில் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வது அவசியம். குறிப்பாக, தீபக் சாஹர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ரன்களை வாரி வழங்கினர். புவனேஷ்வரின் வேகப் பந்துவீச்சும் பெரிதாக கை கொடுக்கவில்லை. எனினும், சொந்த மண்ணில் விளையாடுவது மற்றும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும்.கேப்டன் கோஹ்லி, ராகுல், பன்ட் நல்ல பார்மில் உள்ளனர். முதல் போட்டியில் சொற்ப ரன்னில் வெளியேறிய ரோகித் இம்முறை கணிசமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கலாம். அதே சமயம், முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்ப்பதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெஸ்ட் இண்டீஸ் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வெஸ்ட் இண்டீஸ்: கெய்ரன் போலார்டு (கேப்டன்), பேபியன் ஆலன், பிராண்டன் கிங், தினேஷ் ராம்தின், ஷெல்டன் காட்ரெல், எவின் லூயிஸ், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஷிம்ரோன் ஹெட்மயர், கேரி பியரி, லெண்டில் சிம்மன்ஸ், ஜேசன் ஹோல்டர், ஹேடன் வால்ஷ் ஜூனியர், கீமோ பால், கெஸ்ரிக் வில்லியம்ஸ்.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப் பன்ட், மணிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் அய்யர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, சஞ்சு சாம்சன்.

மழை வந்தாலும்...
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற உள்ள 2வது டி20 போட்டி கனமழை காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த மைதானத்தில் நடக்க உள்ள 3வது சர்வதேச கிரிக்கெட் போட்டி இது. முன்னதாக 2017ல் இங்கு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக தலா 8 ஓவர் கொண்ட போட்டியாக நடந்தது. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசுடன் நடந்த ஒருநாள் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டு தலா 20 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், இன்றைய போட்டியாவது எந்த பாதிப்பும் இல்லாமல் முழுமையாக நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது குறித்து ஆடுகள பராமரிப்பாளர் பிஜு கூறுகையில், ‘இந்த மைதானத்தில் மழைநீர் வடிகால் வசதி மிகச்சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. புல்தரைக்கு கீழே சுமார் 3500 பைப்களை பொருத்தி உள்ளோம். மழை நீர் உள்ளே சென்றதும் உடனடியாக வெளியேற்றப்பட்டு விடும். அரை மணி நேர அவகாசம் கிடைத்தால் போதும். மைதானத்தை மீண்டும் தயார் செய்துவிடுவோம்’ என்கிறார்.

சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர் சஞ்சு சாம்சன் (25 வயது) கேரளாவை சேர்ந்தவர். இவர் இதுவரை ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். 2015, ஜூலை 19ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் 24 பந்தில் 19 ரன் எடுத்துள்ளார். அதன் பிறகு இந்திய அணிக்காகக் களமிறங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவே இல்லை. இந்த நிலையில், சொந்த ஊரில் இன்று நடைபெறும் டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா என கேரள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் கே.எல்.ராகுல் அமர்க்களமாக விளையாடி உள்ளதால், நடுவரிசையில் வேண்டுமானால் இடம் பெறலாம். இவர் பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் களமிறங்கி விளாசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,series ,West Indies ,Thiruvananthapuram ,2nd T20 , Will India win, retaliate, West Indies to win 2nd T20 series?
× RELATED வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது வங்கதேசம்