எனக்கு தெரியாமல் சிறை நிர்வாகம் அனுப்பிய கருணை மனுவை திருப்பி தர வேண்டும்: ஜனாதிபதிக்கு நிர்பயா குற்றவாளி கடிதம்

புதுடெல்லி: ‘தூக்கு தண்டனை உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதால், சிறை நிர்வாகம் எனக்கு தெரியாமல் அனுப்பிய கருணை மனுவை உடனே திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்,’ என ஜனாதிபதிக்கு  நிர்பயா குற்றவாளி கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில், வினய் சர்மா என்ற குற்றவாளி மட்டுமே ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியதாகவும், அதை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், வினய் சர்மா தனது வக்கீல் ஏ.பி.சிங் மூலமாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:

எனது தண்டனையை ரத்து செய்வது தொடர்பாக கருணை மனு அனுப்பும் முன்பாக சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இதர சட்ட வழிமுறைகளை நான்  இன்னும் பயன்படுத்தவில்லை. எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நான் இன்னும் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், அதற்குள், டெல்லி அரசுடன் திகார் சிறை அதிகாரிகள் சதி செய்து, எனது கருணை மனுவை எனக்கு தெரியாமலே, எனது கையெழுத்து இல்லாமல் அனுப்பியுள்ளனர். இதை மத்திய உள்துறை அமைச்சகம் உங்களுக்கு அனுப்பியுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் எனது தண்டனை ரத்து தொடர்பாக  மனுக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. மேலும், தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களும் உள்ளன. எனக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான வழிமுறைகள்  அனைத்தும் இன்னும் முடியவில்லை. அதனால், எனது சம்மதம் மற்றும் கையெழுத்து இல்லாமல் அனுப்பப்பட்ட கருணை மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: