பட்டுக்கோட்டையில் செல்போன் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் ஃப்ரீ

தஞ்சை: பட்டுக்கோட்டையில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் நேற்று 200க்கும், பெரிய வெங்காயம் 140க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் கூடி வருவதால் வெங்காயம் பிரச்னை மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வால் வீடுகள் மட்டுமின்றி ஓட்டல்களிலும் வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஒரு செல்போன் கடை உரிமையாளர் தனது கடையில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக தருவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே செல்போன் கடை வைத்துள்ள இவர் வெங்காய விலை உயர்வு பிரச்னையை தனது வியாபார தந்திரமாக பயன்படுத்தும் வகையில் வெங்காயத்தை இலவசமாக தருவதாக அறிவித்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த வெங்காய விவகாரம் வாட்ஸ் அப்பில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறும்போது, விண்ணைத் தொடும் வகையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என யோசித்தேன். எனது நண்பர்களும் சரி என்றார்கள். இதையடுத்து தற்போது ஒரு ஸ்மார்ட் போனுக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கி வருகிறேன். இதன் மூலம் செல்போன் வியாபாரம் ஆனாலும் செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விலையுயர்ந்த ஒரு உணவு பொருளை இலவசமாக வழங்கிய திருப்தி கிடைத்துள்ளது என்றார்.

Tags : Pattukkottai , Pattukkottai,buy , cell phone,onion free
× RELATED கோட்டக்குப்பத்தில் செல்போன் கோபுரம்