×

புதுச்சேரி பெரிய மார்க்கெட் அருகே வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்மஅடி: விலை உயர்வால் மவுசு அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட் அருகே நள்ளிரவு வெங்காய மூட்டைகளை திருடிய ஆசாமியை கையும் களவுமாக பிடித்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவரை கட்டி வைத்து தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி, நேருவீதியில் பெரிய மார்க்கெட் (குபேர் அங்காடி) உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான காய்கறி, பழங்கள், மளிகை, அலங்கார பொருட்கள், பூக்கடைகள் உள்ளன. இதையொட்டியுள்ள ரங்கபிள்ளை வீதியிலும் மொத்த காய்கறி விற்பனை அங்காடிகள் இயங்கி வருகின்றன. இங்கு வேல்முருகன் மொத்த காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை பெங்களூரில் இருந்து அவரது கடைக்கு வந்த வெங்காய லோடுகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் இறக்கி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
 அப்போது அங்கு பைக்கில் வந்த ஒரு மர்ம ஆசாமி, 50 கிலோ எடை கொண்ட 5 ஆயிரம் மதிப்புள்ள வெங்காய மூட்டை ஒன்றை திருடி எடுத்துச் செல்ல முயன்றார். அப்போது அங்கு  வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள், புதிய நபர் வெங்காய மூட்டையை கடத்தி செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓடிவந்து அந்த மர்ம ஆசாமியை மடக்கி பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

 அப்போது அவர், காளிதாஸ் என்கிற முகேஷ் (32) என்பதும், முதலில் ஒரு வெங்காய மூட்டையை திருடிச் சென்று வீட்டில் வைத்து விட்டு 2வது மூட்டையை திருடும்போது மாட்டிக் கொண்டதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த கடை உரிமையாளர் வேல்முருகன், காளிதாசை அய்யங்குட்டிபாளையம் அழைத்து சென்று அங்கு திருடி வைத்திருந்த வெங்காய மூட்டையை கைப்பற்றினார். அப்போது காளிதாஸ் மனைவி கதறியழுததால் போலீசில் வேல்முருகன் புகார் அளிக்காமல் அவரை அனுப்பி வைத்தார்.

Tags : Puducherry Big Market Stealing , Puducherry ,Market,onions, price rise
× RELATED நாளை தைத்தேரோட்டம் உரிய நிவாரணம்...