பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள நாடு முழுவதும் பாஜகவை மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்: சென்னை திரும்பிய ப.சிதம்பரம் பேட்டி

சென்னை: பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாம் மீள, பாஜகவை நாடு முழுவதும் உள்ள மக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து நேற்று ெசன்ைன வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ப.சிதம்பரம் அளித்த பேட்டி:ஒருவரின் சுதந்திரம் மறுக்கப்பட்டால் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டதற்கு ஈடாகும். பாஜவின் பிற்போக்கு கூட்டம் பாசிச அரசு முறையை நோக்கி நாட்டை கொண்டு செல்கிறது. நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாஜகவை கடுமையாக எதிர்ப்பது தமிழக மக்கள்தான். இது நாடு முழுவதும் பரவ வேண்டும். என் மன உறுதியை குலைக்க வேண்டும் என என்னை சிறையில் அடைத்தார்கள். என் மன உறுதி ஒரு நாளும் குறையாது. நான் வீழ்வேன் என்று யாராவது நினைத்தால் நான் வீழவே மாட்டேன். இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்.2004ல் இருந்து 2010 வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 %. பாஜ ஆட்சியில் நான்கரை சதவீதம் என்று கூறுகின்றனர். அது கூட பொய், 3 % தான். இந்தியா வளர்ச்சி நோக்கி செல்லாமல் பள்ளத்தாக்கில் செல்லும் நிலையில் பாஜ ஆட்சி உள்ளது. நம் நாட்டில் பாஜ ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ஒருபோதும் மீள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர், இன்றைய அரசியல் சூழல் என்ற தலைப்பில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது: பாஜ ஆட்சியின் நோக்கமே ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதுதான். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தார்கள். அவர்களில் 2 பேர் வீடுகளில் பாஜ அரசு சோதனை நடத்தியது. இதற்கு பயந்து மற்றொரு எம்.பி., பாஜகவில் போய் இணைந்துவிட்டார். ஆந்திராவிலும் இதே நிலைமை தான்.  டெல்லியில் வெங்காயம் விலை 200ஐ தொட்டுவிட்டது. நாடு முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. 3.5 % பொருளாதார வளர்ச்சியில் நாடு எவ்வாறு உயரும்?. இப்போது கார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தவர்களில் ஒரு லட்சம் பேர் வரை வேலை இழந்து தவித்து வருகின்றனர்.   இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட ரிசர்வ் வங்கியிடம் இருந்து ₹1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை பறித்து 800 முதலாளிகளுக்கு வழங்கி இருக்கிறார்கள். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டம் தொடங்கும்போது அவர்கள் வரியை மேலும் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள். நான் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். சிறை கட்டிலில் படுத்ததால் என் கழுத்து எலும்பு சரியாகி உள்ளது. காங்கிரஸ் இயக்கம் இருக்கும் வரை, தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் வீழ்த்த முடியாது என்றார்.

கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>