×

ஆறு, அணைகளுக்கு நீர்வரத்தை அறிய துல்லிய தொழில் நுட்ப திட்டம் இல்லை: நீர் வீணாவதால் பாதிப்பு அதிகம்

கோவை: தமிழகத்தில் ஆறு, அணைகளுக்கு நீர் வரத்து விவரங்களை அறிய துல்லியமான தொழில் நுட்ப திட்டம் இல்லை. நீர் வீணாகி வருவதால் பாதிப்பு அதிகமாகி வருகிறது. தமிழகத்தில் 35 ஆறுகள், 66 அணைகள், 34,651 குளங்கள், 9,600 கி.மீ. தூர வாய்க்கால்கள் அமைந்துள்ளன.  மாநில அளவில் மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் நீலகிரி மாவட்டத்தில் அவிலாஞ்சி, எமரால்டு, முக்கூர்த்தி, பார்சன் வேலி, குந்தா, கிளன்மார்க்கன், பைக்காரா உட்பட 22 அணைகள், கோவையில் காடம்பாறை, பில்லூர், உப்பர் ஆழியாறு,  வண்டல் அணை, கன்னியாகுமரியில் கொடையூர் உட்பட 4 அணைகள், திருநெல்வேலியில் தாமிரபரணி உட்பட 3 நீர்த்தேக்கங்கள் உட்பட 38 நீர்த்தேக்கங்கள் உள்ளன.ஆனால் ஆறு, அணை, குளங்களுக்கு நீர்வரத்து விவரங்களை துல்லியமாக அறிய இதுவரை போதுமான அளவு தொழில் நுட்ப திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பில் 1.91  கோடி ரூபாய் செலவில் ரிட்டாஸ் என்ற நீர், வானிலை தகவல் விவர திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் அமலாக்கப்படவில்லை. கோவை, சென்னை, தஞ்சாவூர், மதுரை மண்டலத்திற்குட்பட்ட 49 நீர்த்தேக்கங்களில்  நீர் வரத்து விவரங்கள் உத்தேச கணக்கீட்டில்தான் அளவிடப்படுகிறது.  

மாநில அளவில் 49 தானியங்கி மழை அளவு கண்டறியும் கருவி, 49 தானியங்கி ஆற்று நீர் வேகம், அளவு கண்டறியும் கருவி, 25 தானியங்கி அலை அளக்கும் கருவி மற்றும் 49 இடங்களில் சென்சார்கள் நிறுவும் திட்டமும்  அமலாக்கப்படவில்லை. சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளும் முடங்கி கிடக்கிறது. கோவையில் கல்லார், பவானி, சென்னையில் கூவம், ஆரணியாறு  மற்றும் மதுரை, தஞ்சாவூர் மண்டலத்தில் பாலாறு, நம்பியாறு, கொடையாறு, குண்டாறு, வாளையார், செய்யாறு, குதிரையாறு, மகாராஜா சமுத்திரம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் அளவு அறியும் தொழில் நுட்பம் செயல்படுத்தப்படவில்லை. மேலும் விவசாய தேவைக்காக அணை, ஆறுகளில் இருந்து திறக்கப்படும் நீர் வயல்களுக்கு செல்லும் வழியில் வீணாகி வருகிறது. ஷட்டர், மதகு பழுது, வாய்க்கால் உடைப்பு போன்றவற்றினால் 35 முதல் 40 சதவீத நீர் வீணாகிறது.  மழைக்காலங்களில் ஆறு, நீர்த்தேக்கங்களில் இருந்து பாயும் தண்ணீர் விளை நிலங்களில் அதிகளவு பாய்வதும் நடக்கிறது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்து போகிறது.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீர் அளவும் முறையாக கணக்கிடப்படாத நிலையில் இருக்கிறது. நீர் வரத்து, வெளியேறும் நீர் அளவு கண்டறியாமல் விட்டதால் நீர் இழப்பு அதிகமாகி வருகிறது. நீர்  அளவை கண்டறியும் கருவி அமைப்பதன் மூலமாக அணையில் எவ்வளவு நீர் தேக்கலாம் என்பதை துல்லியமாக அளவிட முடியும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சரியாக கணிக்க முடியவில்லை
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘‘மாநில அளவில் ஆண்டுதோறும் 953 மி.மீ. மழை பெய்கிறது. 50 முதல் 60 நாட்களில் மட்டுமே ஆறுகளில் நீர்வரத்து இருக்கிறது. ஆனால் அந்த கால கட்டத்தில் ஆற்றில் வரும் நீரின் அளவு  உத்தேசமாகத்தான் அறியப்படுகிறது. ஆற்றின் கரை மற்றும் நீர்த்தேக்க பகுதியில் வானிலை விவரங்களை சரியாக கணிக்க முடியவில்லை. ஏற்கனவே வானிலை தகவலுக்காக 611 வானிலை மையங்களும், 56 தானியங்கி மையங்களும், 45  சீதோஷ்ண நிலையங்களும், 812 நிலத்தடி நீர் மட்டம் கண்டறியும் மையங்களும் இயங்கி வருகின்றன. நவீன தொழில்நுட்பத்தில் ஆறு, அணைகளுக்கு வரும் நீரை சரியாக அளவிட்டால் நீர் மேலாண்மையை சரியாக கையாள முடியும்.  சீதோஷ்ண நிலை அடிக்கடி மாறி வருவதால் வானிலை, நீர் அளவு கண்டறிதல் அவசியமாக இருக்கிறது ’’ என்றனர்.

Tags : Six, dams ,precise technical, high
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...