தமிழக காவல்துறையில் 70 ஆயிரம் போலீசுக்கு புத்தாக்க பயிற்சி: வெளிமாநில போலீசார் சென்னையில் ஆய்வு

சென்னை: தமிழக காவல்துறையில் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மன உளைச்சலில் தவிப்பதாகவும், அதிக அளவில் மனச்சுமையுடன் வேலை செய்வதால், பல உயரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் முடிவு  செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காவலர் நலன் பிரிவு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் பயிற்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவர், மைசூரில் உள்ள ஆசியாவிலேயே சிறந்த மனநல சிகிச்சை மருத்துவமனைக்கு சென்று  ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள், ஏட்டுகள் என்று 450 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மைசூர் சென்று சிறப்பு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற அனைவரும் தமிழகம் முழுவதும்  மாவட்டங்களில் போலீசாருக்கு ஒவ்வொரு வாரமும் புத்தாக்க பயிற்சிகளை அளித்து வருகின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் இந்த பயிற்சி போலீசாருக்கு அளிக்கப்படுகிறது. கடைசி நாளில் குடும்பத்துடன் போலீசார் பங்கேற்க  அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின்போது போலீசாருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

 இந்தப் பயிற்சி இதுவரை சுமார் 70 ஆயிரம் பேருக்கு வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்த போலீசாா 30 முதல் 40 சதவீதம் வரை மன அழுத்தம் குறைந்தது தெரியவந்துள்ளது. இந்த பயிற்சியின் வெற்றி, வெளிமாநில போலீசாருக்கும்  தெரியவந்தது. இதனால் மகராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநில போலீஸ் அதிகாரிகள் மற்றும் சிஆர்பிஎப் போலீசாருக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக அதிகாரிகள் சென்னை வந்து ஆய்வு செய்தனர். பயிற்சியிலும் அவர்கள் பங்கேற்றனர்.  பின்னர் போலீசாரின் பயிற்சி விவரங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

Related Stories: