இலங்கையில் ஆட்சிமாற்றம் மீளுமா, மூழ்குமா மீன்பிடித்தொழில்?

* 10 லட்சம் மீனவர்களை பாதுகாக்குமா அரசுகள்?

* 5 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும்

ராமேஸ்வரம்: இந்தியா - இலங்கை நாடுகளின் 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது. இதன் பின் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை  கேள்விக்குறியானது. தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போதெல்லாம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.சட்டத்தால் சிக்கல்: இலங்கை உள்நாட்டு போரின்போது கடலில் மீனவர்கள் உயிர்ப்பலி, கைது, சிறைவைப்பு, துப்பாக்கிச்சூடு, தாக்குதலுக்குள்ளாவதும், படகுகள் கடலில் மூழ்கடிப்பு, மீன்பிடி வலை அறுப்பு போன்ற சம்பவங்கள் நடந்தது. இலங்கை  கடற்படையின் அத்துமீறல்களால் தமிழக மீனவர்களின் மீன்பிடி ெதாழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையில் கடந்த ஆட்சியின்போது அரசால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தினால் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில்  மிகப்பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவானது. வாழ்வாதாரம் பாதிக்கும்: கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய கடல் தொழில் சட்டத்தினால் மீனவர்கள் தங்களது படகுகளை இழப்பதுடன், ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இலங்கை அரசிடம் தாரை வார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழக மீனவர்களின் ஒட்டுமொத்த மீன்பிடித்தொழில் கேள்விக்குறியாகி நிற்கும் நிலையில்தான், தற்போது தமிழின விரோதப்போக்கை கொண்ட கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகவும்  பொறுப்பேற்றுள்ளனர். இம்மாற்றத்தினால் எதிர்காலத்தில் மீன்பிடித்தொழிலில் எத்தகைய மாற்றங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டிவருமோ என்ற எதிர்பார்ப்பும், அச்சமும் தமிழக மீனவர்களிடையே உருவாகியுள்ளது.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்குமான உள்நாட்டு சண்டை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 2005ல் மகிந்த ராஜபக்சே இலங்கை அதிபராக பொறுப்பேற்றார். இவர் தமிழீழப்போரை முடிவுக்கு  கொண்டு வர முடிவு செய்தார். இதற்காக தனது சகோதரரும், ராணுவ அதிகாரியுமான கோத்தபய ராஜபக்சேவை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அரசு செயலாளராக நியமித்தார். ஈழப்போராளிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியா அதிக  எதிர்ப்பு காட்டாமல் இருக்க, தமிழக மீனவர்கள் பிரச்னையில் சில  சமரசங்களையும் ராஜபக்சே அரசு செய்து கொண்டது.இலங்கையிலும் எதிர்ப்பு: இதனடிப்படையில் படகுடன் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்களும், மீன்பிடி படகுகளும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் விடுவிக்கப்படும் நடவடிக்கையை ராஜபக்சே அரசு மேற்கொண்டது. 2009ல் ஈழப்போர்  முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, இரண்டாம் முறையும் ராஜபக்சே அதிபராக பொறுப்பேற்ற நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க இலங்கை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து முடிவெடுக்க  இருநாட்டு மீனவர்கள் நேரில் சந்தித்து பேசுவதற்குரிய நடவடிக்கை இருநாட்டு அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்டது. தீர்வு தராத பேச்சு: 2015ம் ஆண்டு துவக்கத்தில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்ரிபால சிறிசேனா அதிபராக பொறுப்பேற்ற பின்  இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் கைது, படகுகள் கைப்பற்றும் சம்பவங்கள்  அதிகரித்தன. இதனால் நூற்றுக்கணக்கான படகுகள் பல ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் கடலில் நிறுத்தப்பட்டதால் சேதமடைந்து கடலில் மூழ்கின.

பல நூறு கோடி நஷ்டம்: படகுகளை இழந்ததன் மூலம் மீனவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மீனவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் இருநாட்டு நட்புறவு அடிப்படையில் கடந்த ஆண்டு இலங்கை அரசால்  மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் மீட்க முடியாத நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்து இலங்கை கடலில் மூழ்கியதால் படகை இழந்து தவிக்கும் மீனவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும்  பறிபோயுள்ளது. இப்பிரச்னைகளுக்கு இடையேதான் கடந்த ஆண்டு இலங்கையில் புதிய கடல் தொழில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசால் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இலங்கை  கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 26 விசைப்படகுகள் இலங்கை அரசுடமையாக்கப்பட்டுள்ளது. சட்டம் ரத்தாகுமா: 8 படகுகளை அரசுடமையாக்கும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்ட புதிய கடல்தொழில் சட்டம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், மீன்பிடித்தொழிலுக்கும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் இச்சட்டம் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மீனவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மேலும், பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில், இலங்கை தமிழரான டக்ளஸ் தேவானந்தா இலங்கை கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதுடன், தமிழக மீனவர்கள் அச்சமின்றி  மீன்பிடித்தொழில் செய்யலாம் என்று இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆனாலும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் முன்பு இருந்த நிலையே நீடிக்கிறது.பலத்த கண்காணிப்பு: கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற நாள் முதல், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு முன்பை விட தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை  கப்பல்களும் அணிவகுத்து நிற்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆட்சியில் நடந்தது போல் மீனவர்கள் படகுடன் சிறைப்பிடிக்கும் சம்பவங்கள் இனிமேலும் தொடர்ந்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த மீன்பிடித்தொழிலும் நசிந்துவிடும்  என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிதாக பதவியேற்ற கோத்தபய அரசு, தமிழக மீனவர்கள் விசயத்தில் எந்தமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை கணிக்க முடியாத நிலையில், இலங்கை அதிபரிடம், தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னை குறித்து  பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பேச வேண்டும். நின்றுபோன இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடருவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில்  வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய சட்டம் ரத்து செய்யப்படுமா? கடற்படை தாக்குதல் இல்லாமல் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு இடையே ஏற்படும் மாற்றங்கள் விளைவுகள் குறித்தும் தமிழக மீனவர்கள்,  மக்களிடையே மிகப்பெரும் எதிபார்ப்பு உருவாகியுள்ளது.

கடற்படை முகாம் மூலம் கண்காணிப்பு

இந்திய மீனவர்களை இலங்கை கடல் பகுதியிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த திட்டமிட்ட இலங்கை அரசு, கச்சத்தீவில் சிறிய அளவில் இலங்கை கடற்படை முகாமை அமைக்க 2008ல் முடிவு செய்தது. கச்சத்தீவின் வடமேற்கிலுள்ள  சமவெளி பகுதியில் நவீன கண்காணிப்பு தொடர்பு கருவிகளுடன் கூடிய ஏரியா கடற்படை முகாம் ஓன்றை அமைத்ததுடன் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு ரோந்துப்பணிகளையும் தீவிரப்படுத்தியது.  இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் நிரந்தரமான அச்ச உணர்வை இலங்கை அரசு ஏற்படுத்தியது. 1,076 கிமீ நீளம் கொண்ட தமிழக கடலோர  பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், 45 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நாட்டுப்படகு  மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடித்தொழிலில்  ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்களின் மீன் உணவு தேவை போக மீனவர்களால்  பிடித்து வரப்படும் இறால், நண்டு போன்ற உயர்வகை மீன்களின் ஏற்றுமதியின்  மூலம் ஆண்டுதோறும் ரூ.5  ஆயிரம் கோடிக்கு மேல் நம் நாட்டுக்கு அந்நிய  செலவாணி கிடைத்து வருகிறது. கடலுக்கு சென்றால் உயிருடன் கரை திரும்புவது  நிச்சயமற்ற நிலையில் வாழ்நாள் முழுவதும் கடல் நீரில் உழன்று மீன்பிடித்  தொழில் செய்து வரும்  மீனவர்களில் 80 சதவீதத்தினர் இன்றும்  அன்றாடங்காய்ச்சிகளாய் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பல கோடி ரூபாய் படகுகளுக்கு அபராதம்

2018ம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டின் மீன்பிடித்துறை அமைச்சகம் புதிய கடல்தொழில் சட்டத்தை முன்வைத்தது. இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு கப்பல், மீன்பிடி படகுகளுக்கு ரூ.60  லட்சம் முதல் பல கோடி வரை அபராதம் விதிக்க, அத்துமீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வரைவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தினால் தமிழக மீனவர்கள்  மட்டுமல்லாமல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்துமகாக்கடலில் மீன்பிடிக்க செல்லும் கேரளா, கர்நாடகா, ஆந்திர மீனவர்களின் படகுகளும் இலங்கை கடல் எல்லைக்குள் செல்ல நேரிட்டால் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு  உள்ளாகும்.

500 பேர் பலி

இலங்கையில் கடந்த காலங்களில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த சண்டையை காரனம் காட்டி தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியாயினர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கை, கால், பார்வையை இழந்தனர்.

4 சுற்று பேச்சு நடந்தும் முன்னேற்றமில்லை

தடை செய்யப்பட்ட மீன்பிடியால் இலங்கை மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் உருவாகியது. இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கூறிய இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பு நடவடிக்கையை  தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று இருநாட்டு மீனவர்களுக்குள் இணக்கமான சூழ்நிலை உருவாக இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. நான்கு  சுற்றுகள் பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. நடந்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

பிரச்னையின்றி மீன் பிடிக்க அனுமதி

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு, கடந்த அரசினால் கொண்டு வரப்பட்ட புதிய கடல்தொழில் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கடற்படை தாக்குதல் நடவடிக்கையை கைவிட உத்தரவிட வேண்டும்.  கச்சத்தீவு கடல் பகுதியில் எவ்வித பிரச்னையும் இன்றி முன்பு போல் மீன்பிடிக்க அனுமதி அளித்து பாக்ஜலசந்தி கடலில் தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் இணக்கமாக மீன்பிடி தொழில் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும் போன்ற கோரிக்கைகள் தமிழக மீனவர்கள் தரப்பில் இலங்கை அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: