உயர்நீதிமன்றத்தின் கருத்தை உறுதி செய்யும் வகையில் ஒருநாள் மழைக்கே குண்டும், குழியுமாக மாறிய சாலைகள்

* முறையாக பராமரிக்கவில்லை

* பொதுமக்கள் குற்றச்சாட்டு

* தரமாக அமைக்க வலியுறுத்தல்

சென்னை: உயர்நீதிமன்ற கருத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு நாள் பெய்த மழைக்கே சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் குண்டு குழியுமாக மாறிவிட்டன. இதனால் அவதியடைந்த பொதுமக்கள் தரமான  சாலைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள சாலைகள் பேருந்து செல்லும் சாலைகள், உட்புற சாலைகள், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் என்று மூன்று வகையாக பிரித்து   பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியில் 387.35  கி.மீ. நீளமுள்ள  பேருந்து சாலைகளும், 5623 கி.மீ நீளமுள்ள உட்பிரிவு சாலைகளும், 1296.22 கி.மீ. நீளத்திற்கு சிமென்ட் கான்கிரீட் சாலைகளும் உள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் மாநகராட்சியின் சாலைகள் துறையால்  பாரமரிக்கப்பட்டுவருகின்றன. இதைத்  தவிர்த்து நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை, வால்டாக்ஸ் நெடுஞ்சாலை, வேளச்சேரி மெயின்ரோடு, மணலி  நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, 100 அடி சாலை  உட்பட 250 கி.மீ நீள சாலைகள் உள்ளது.

இவற்றை முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தால் பெரும்பாலான சாலைகள் மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. மேலும் கடந்த வாரம் ஒரு நாள் பெய்த  மழையால் சென்னை சாலைகள் அனைத்தும்  குண்டும் குழியுமாக மாறிவிட்டதாக  பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையின் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மிக முக்கிய சாலையான அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெரு, மூலக்கொத்தளம் சிபி சாலை, காசிமேடு புதுவண்ணாரப்பேட்டை சேனியம்மன் கோயில் தெரு, கொருக்குப்பேட்டை பாரதி நகர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மோசமாக உள்ளன.  திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணி நடைபெற்று வருவதால், திருவொற்றியூர் எல்லை அம்மன் கோவில் தெரு, திருவொற்றியூர் மார்க்கெட், விம்கோ நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால்  சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைப்போன்று நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்து குண்டும் குழியுமாக உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்பயர் சிட்டி, நீதிபதி செல்வகுமார் பிரதான சாலை, அப்பாசாமி நாயுடு சாலையில் இருந்து சிவ-விஷ்ணு கோயில் செல்லும் சாலை உட்பட பல சாலைகள் குண்டும், குழியுமாக  மாறியுள்ளது.திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில் இருந்து ராமகிருஷ்ணாபுரம் செல்லும் சாலை, காசிநாதபுரம் இருளர் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் கிராம சாலைகள் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இவ்வாறு மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமாகி உள்ளதால் கிராமப்புற மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு சாலை, அரக்கோணம் சாலை, வேலூர் சாலை, வந்தவாசி சாலை, உத்திரமேரூர் சாலை, செய்யாறு சாலை, சென்னை சாலை போன்ற சாலைகள் குண்டும் குழியுமாக மேடு பள்ளங்களாக படுமோசமாக  மாறியுள்ளன. நகரில் உள்ள காந்தி ேராடு, காமராஜர் வீதி, நெல்லி கார வீதி, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, கீழம்பி கிராமம் செல்லும் சாலை போன்ற பல்வேறு சாலைகள் படு மோசமாக மாறி உள்ளன.நாவலூர் முதல் பூஞ்சேரி வரை பராமரிப்பு இல்லாததால் வாணியன்சாவடி, படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் பகுதிகளில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.  திருப்போரூர் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெறுவதால், நான்கு மாட வீதிகள், ஓ.எம். ஆர். சாலை, போன்றவை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. வாலாஜாபாத்தில் ஒன்றியத்தில் ராஜவீதி, செங்கல்பட்டு சாலை, காஞ்சிபுரம் சாலை ஆகியவைகள் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற பல்லாங்குழி சாலையாக மாறி உள்ளன. திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட சங்கு  தீர்த்த குளக்கரை தெரு, ருத்திரான் கோயில் தெரு, இந்திரா நகர், வடக்குப்பட்டு, சன்னதி தெரு, திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மணம்பாக்கம், பெரும்பேடு, கிளாப்பாக்கம், பாண்டூர், சாலூர், கோரப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  சாலைகளிலும் மழையால் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதிகளான வாணி விநாயகர் கோயில் தெரு, பள்ளி விநாயகர் கோயில் தெரு, பழைய ஈஸ்வரன் கோயில் தெரு, கோபாலபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட சாலைகள் குண்டும் குழியுமாக  கிடக்கிறது. இந்நிலையில் ஒரு தொடர் மழைக்கே சாலைகள்  குண்டும் குழியுமாக மாறுவதற்கு  முறையான  பராமரிப்பு இல்லாததும், தரமற்ற சாலைகள் போட்டதும்தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.  முறையான  பராமரிப்பு இல்லாத காரணத்தால் சாலைகளில் அதிக விபத்து ஏற்படுகிறது என்ற உயர்நீதிமன்றத்தின்  கருத்தை இந்த மழை உறுதி செய்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களில் சாலை பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிலை முறையாக செலவு செய்து தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு செய்தால் மழைக் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: