×

டாடாவின் புதிய 7 சீட்டர் கார்

கடந்த ஜனவரி மாதம் டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஹாரியர் எஸ்யூவி ரக அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய 7 சீட்டர் மாடலை கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார்  ஷோவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிப்படுத்தியது. பஸ்ஸார்டு என்ற பெயரில் இந்த மாடல் குறிப்பிடப்பட்டது. இப்புதிய 7 சீட்டர் எஸ்யூவி ரக கார், தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில், மிக விரைவில் இப்புதிய 7 சீட்டர் எஸ்யூவி ரக காரை, டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த எஸ்யூவி ரக காருக்கு கிராவிட்டாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், டீசர் வீடியோவில் வரும் 2020 பிப்ரவரி  மாதம் இப்புதிய எஸ்யூவி ரக கார், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப்பிரிவு தலைவர் மாயங்க் பரீக் கூறுகையில், “சொகுசு,  செயல்திறன் போன்ற அனைத்து விதத்திலும் டாடா கிராவிட்டாஸ் ஓர் உன்னத அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இந்திய வாகன சந்தையில், இந்த கார் மிக முக்கிய இடத்தை பிடிக்கும்” என்றார்.

டாடா ஹாரியர் எஸ்யூவி ரக காரைப்போன்றே இதன் முகப்பு டிசைன் இடம்பெற்றுள்ளது. அதேநேரத்தில், 7 சீட்டர் மாடலுக்கு தக்கவாறு நீளத்திலும், டிசைனிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹாரியர் எஸ்யூவியைவிட கிராவிட்டாஸ்  எஸ்யூவி நீளத்தில் 63 மி.மீ. வரையிலும், அகலத்தில் 72 மி.மீ. வரையிலும், உயரத்தில் 80 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி ரக காரில், வீல் பேஸ் மட்டும் 2,741 மி.மீ. என்ற அளவில் தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும், 18  அங்குல அலாய் வீல், பனோரமிக் சன்ரூப் ஆகியவை கூடுதல் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ளது.இப்புதிய டாடா கிராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவி ரக காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல்  அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர இருக்கிறது. வரும் 2020 பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  ₹15 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து எதிர்பார்க்கலாம்.

Tags : Tata , Tata's ,new, 7 seater ,car
× RELATED தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ்...