பாதுகாப்பான குடிநீர் என்பது இனி கானல்நீர்? குடிக்கும் தண்ணீரில் வெடிக்கும் பிரச்னை

* அடுத்த 2 ஆண்டுகளில் தவிக்கப் போகுதா தமிழகம்?

* ஆண்டுக்கு 2 லட்சம் பேரை காவு வாங்கும் அவலம்

இந்தியாவில் ஆண்டுதோறும் பாதுகாப்பான குடிநீரின்றி 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். சுமார் 60 கோடி இந்தியர்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிபரங்கள், நாம் மிடறு மிடறாக விழுங்கும்  குடிநீரை சந்தேகப்பட வைக்கிறது. பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் என்பது மனித உரிமைகளில் ஒன்று. அது எல்லோருக்கும் கிடைக்கிறதா?குடிநீரின் தரம்: சமீபத்தில் மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில், மாநில அரசுகள் வினியோகம் செய்யும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்தது.  அதில்  சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட  நகரங்களில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை என்றும், அந்த குடிநீரில் இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (பிஐஎஸ்) செய்த 11 சோதனைகளில் 10ல் மோசமான முடிவுகள் வெளியானதாகவும்  குற்றம் சாட்டியது.குடிநீரில் நச்சுப் பொருள்களும், நோய்த்தொற்றுகளைப் பரப்பும் கிருமிகளும், நுண்ணுயிரிகளும் காணப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்தது. இந்த ஆய்வு 20 பெருநகரங்களில் தான் நடத்தப்பட்டது என்றால், இந்தியாவில் உள்ள  கிராமப்புறங்களில் குடிநீரின் சுகாதாரம் குறித்து யார் ஆய்வு செய்வது?குடிநீரில் குறிப்பிட்ட அளவில் தான் கனிம, வேதியல் பொருட்கள் கலந்திருக்கவேண்டும். அவற்றின் அளவு மிகுதியானால் உடல்நலக்கோளாறு ஏற்படும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. சென்னை குடிநீரில் குளோரைட், புளூரைட்,  அமோனியா, போரான், காலிபார்ம் போன்ற வேதிப்பொருட்கள் அதிகமுள்ளதால் குடிநீரின் தரம் மிகவும் மோசமாகி விட்டது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மதுரை மாநகராட்சி தினமும் 98 லட்சம் லிட்டர் பாதாளச் சாக்கடை நீர்  வைகை ஆற்றில் கலக்கிறது என்றும், இதுதவிர 5 லட்சம் லிட்டர் மருத்துவ கழிவுநீர், 20 லட்சம் லிட்டர் குளிக்கும் நீர் ஆற்றில்  கலப்பதாகவும் தெரிய வந்தது. மதுரை நகரத்தில் மட்டும் 45 இடங்களில் கழிவுநீர் வைகையில் கலக்கிறது. இவை மட்டுமின்றி பந்தல்குடி உள்ளிட்ட மதுரையில் ஓடும் 11 கால்வாய்களின் கழிவுநீரும் வைகை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில்  சங்கமமாகின்றன.  இதனால் வைகை நதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் குடிக்கும் தன்மையை இழந்து விட்டன என்பது அதிர்ச்சியான செய்தி.இதேபோல மற்ற மாவட்டங்களில் நிலத்தடி நீரில் புளோரைடு அதிகமாக உள்ளது என்று ஆய்வறிக்கைகள் சொல்கின்றன.நிதி ஆயோக் என்ன சொல்லுது? இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்  வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இல்லையென்றே தைரியமாக சொல்லலாம். ஐக்கிய நாடுகள் சபையின் 2018ம் ஆண்டுக்கான மனிதவளக் குறியீட்டின் அறிக்கையின்படி,  உலகிலுள்ள 189 நாடுகளில் சுத்தமான குடிநீர் வழங்குவதில் இந்தியாவிற்கு கிடைத்த இடம் 130. நம் அருகில் உள்ள சின்னஞ்சிறு நாடான இலங்கைக்கு கிடைத்த இடம் 76. இந்தியாவில் 16.3 கோடி மக்கள்  தற்போதும் பாதுகாப்பான குடிநீர் வசதி  இல்லாதவர்களாக  இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாட்டை 22 நகரங்கள் எதிர்கொள்ள உள்ளதாகவும்,அதில்  ராஜஸ்தானும், தமிழ்நாடும் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலங்கள் என்றும் எச்சரித்துள்ளது.

ஒழியும் கிணறுகள் எண்ணிக்கை2006ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் 4.14 லட்சம் திறந்தவெளி கிணறுகள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  தமிழக அரசு வெளியிட்ட புள்ளிவிபரக் கணக்குபடி, 2000ம் ஆண்டில்  விவசாயத்திற்கு பயன்படுத்த கிணறுகள் எண்ணிக்கை 18.33 லட்சம். இதில் 1.59 லட்சம் கிணறுகள் பயன்பாடின்றி போய் விட்டன.  நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் மாநிலமாக தமிழகம் தான் உள்ளது.  இதனால் தான் தமிழகத்தில் வற்றாத  ஜீவநதிகளாக ஓடிவந்த தாமிரபரணி, காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை உள்ளிட்டவற்றை அவற்றின் சிறப்பை இழந்து வருகின்றன. தாமிரபரணி ஆற்றில் நீர் எடுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியால், அந்த நீரை  நம்பியுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் பல ஆயிரம் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இப்படி தமிழகத்தில் 17 மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீராதாரம் சுரண்டப்பட்டு விட்டது. இதனால்  விவசாயம் பொய்த்து, விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வதும், சொந்த நாட்டில் அகதிகளாக இடம் பெயர்வதும்  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

குடிநீருக்கு கட்டணம்இந்த நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் தனியார் தண்ணீர் கம்பெனிகள்  மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.  தனியார் எங்கிருந்து தண்ணீரை மக்களுக்கு வழங்கப்போகிறது? பூமியில் இருந்து தானே?  சுமார் 35 லட்சம் மக்கள்தொகை கொண்ட மதுரை மாவட்டத்திற்கு உருப்படியான குடிநீர்  திட்டங்கள் இல்லை. இதனால் குடம் குடிநீரை 5 முதல் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலையில் தான் மக்கள் உள்ளனர்.இழுத்தடிக்கப்படும் திட்டம்: பெரியாறு அணையில் இருந்து  தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேறும் லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு வர 2017ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஏற்கனவே இந்த திட்டம்  2009, 2012ம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தப்பட்டு சாத்தியமில்லையென்று கைவிடப்பட்டது.  தற்போது மீண்டும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதாக அரசு கூறுகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இந்த திட்டத்தை துவக்க முடியவில்லை. இது  போலத்தான் தமிழகம் முழுவதும் குடிநீர் திட்டங்கள்

ஜவ்வாக இழுத்தடிக்கப்படுகின்றன.`அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படுவதை 2024க்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு’ என பிரதமர் மோடி கூறுகிறார்.  ஆனால், பாதுகாப்பான நீருக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அறிவிக்கும் எந்தவொரு திட்டமும் அரசின்  பரிசீலனையில் இல்லை என்று  மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திரசிங் செகவாத் கூறுகிறார். அப்படியென்றால், பிரதமர் மோடியின் இலக்கு கானல்நீர் தானா?

மாற்றுத்திட்டம்

இந்தியாவைப் பொறுத்தளவில், ஆண்டுதோறும் ெபய்யும் மழைநீரை ஏரி, குளங்களில் சேமித்தாலே குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும். ஆனால், குடிநீர் ஆதாரங்களாக உள்ள கண்மாய், குளம் போன்றவை ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டுள்ளதுடன் தூர்வாராமல் கிடக்கின்றன. இதனால் பெய்யும் மழை வீணாகிறது. பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றுவதன் மூலம் தண்ணீரை சேமிக்க முடியும். அத்துடன் சொட்டுநீர்  பாசனமுறைக்கு மாறுவதன் மூலம் நீராதாரத்தை சேமிக்க முடியும்.

வைகை உயிரற்ற நதி தான்...

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் முனைவர் எஸ்.தினகரன் கூறுகையில், ‘`வற்றாத ஜீவநதியென்றால் ஆண்டு முழுவதும் ஓட வேண்டும். ஆனால், வைகை உயிரற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆற்றுப்பகுதியில் உள்ள நீரில்  உள்ள தாவரங்களை உண்டு வாழக்கூடிய பூச்சிகள் மூலம் தண்ணீர் சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால், தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் ஹேட் பிஷ் என்ற மீ்ன் வளர்க்கப்படுவதால் இந்த உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இவற்றால் நாட்டு மீன்  இனங்களும் அழிக்கப்படுகின்றன. இவை குறித்த பார்வை அரசுக்குத் தேவைப்படுகிறது. குறிப்பாக, குடிநீரில் அப்படி வாழும் உயிரினங்கள் குறித்த ஆய்வு நடத்தப்படுவதில்லை. ஏனெனில், நீரின் அளவை அளவிடத் தெரிந்த நீரியல்  பொறியாளர்களைத் தான் மாநகராட்சி நிர்வாகங்கள் வேலைக்கு வைத்துள்ளன. ஆனால், நீரியல் உயிர்ப்பொறியாளர்கள் பணியிடம் நிரப்படுவதில்லை. நீரில் உள்ள கிருமிகளை பிறகு எப்படி கண்டுபிடிக்க முடியும். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த  நாடுகளில் இந்த பணியிடம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இந்த பணியிடம் குறித்த பார்வையே இல்லை.குடிநீரில் குளோரின்   கலப்பதற்கு பெரும்பாலும் சுகாதாரப்பணியாளர்களையே பயன்படுத்துகிறார்கள். குடிநீரில்  குளோரின் அளவு கூடினாலோ, குறைந்தாலோ பிரச்னை தான். இவற்றை முதலில் சரி செய்தாலே குடிநீரால் ஏற்படும் பெருமளவு நோய்களைத் தடுக்க முடியும்’’ என்கிறார்.

கேன் தண்ணீர் சுத்தமானதா?

தமிழகத்தில் தினந்தோறும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விற்பனையாகின்றன. ஆனால், இந்த குடிநீர் பாதுகாப்பானதா என்பதே கேள்வி.இதனால் ஏராளமான போலி குடிநீர் ஆலைகள் ஏராளமாக இயங்குகின்றன. வீடுகள்,  ஆலைகள், ஹோட்டல்கள், விடுதிகள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு இங்கிருந்து தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அன்றாடம் கோடிக்கணக்கான மக்கள் இந்த குடிநீரைத்தான் குடித்து நோயாளியாகி  வருகின்றனர். மதுரையில் அழகர்கோவில், மேலூர் சாலைகளில் பல குடிநீர் ஆலைகள் இயங்குகின்றன. பல ஆயிரம் அடி போர் போட்டு தண்ணீரைச் சுரண்டி லாரி, டிராக்டர்களில் மட்டுமின்றி கேன்களில் தண்ணீரை நிரப்பி ஹோட்டல், விடுதி,  வீடுகள், ரயில்நிலையம் போன்றவற்றிற்கு விற்பனை செய்து வருகின்றனர். இதில் கலக்கப்படும் குளோரின் அளவு சோதிக்கப்படுவதில்லை.  துருப்பிடித்த வாகனங்களில் தண்ணீர் நிரப்பி வீடு, வீடாக விற்பனை செய்பவர்களும் உண்டு. இவற்றின்  மூலமும் நோய் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: