தட்டுக்கு வராத வாழைப்பழம் திட்டம்: முட்டை வாங்காத மாணவர்களுக்கு முட்டுக்கட்டை

கோவை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முட்டை சாப்பிடாத பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டம் முடங்கியுள்ளது.தமிழகத்தில் அரசு ஆரம்பப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 51.96 லட்சம் மாணவ, மாணவிகள் சத்துணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர். ஒரு ஆண்டிற்கு 210 நாட்கள் சத்துணவில் முட்டை வழங்க  திட்டமிடப்பட்டு சப்ளை நடக்கிறது.  முட்டை சாப்பிடாத மாணவ, மாணவிகளுக்கு வாழைப்பழம் வழங்கும் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்திற்கு சமூக நலத்துறை மூலமாக  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் அமலாக்கப்பட்டு வந்தது. ஒரு வாழை பழத்திற்கு 1.25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த விலைக்கு அழுகி கெட்டுப்போன வாழைப்பழம்கூட வாங்க முடியாத நிலையிருக்கிறது. எனவே கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்தால் வாழைப்பழம் திட்டத்தை தொடரலாம் இல்லாவிட்டால் நிறுத்திவிடலாம் என பள்ளி  கல்வித்துறையினரும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஒரு வாழைப்பழத்திற்கு 1.25 ரூபாயில் இருந்து 3.50 ரூபாய் என விலை உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மாநில அளவில் முட்டை சாப்பிடாத 12,946 மாணவ, மாணவிகளுக்காக தினமும் வாழைப்பழம்  வாங்கி வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்காக 61.17 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் மாநில அளவில், இந்த தொகை முறையாக பிரித்து வழங்கப்படவில்லை. ‘தட்டுக்கு வராத வாழைப்பழம்’ திட்டத்திற்கு அரசு அறிவிப்பின்படி நிதி  ஒதுக்கீடு முறையாக நடக்கிறது. வாழைப்பழம் வாங்கி மாணவ, மாணவிகளுக்கு வழங்கியதாக கணக்கும் காட்டப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டாக வாழைப்பழம் வாங்கிய கணக்கில் விதிமுறை மீறல் நடப்பதாக  கூறப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் சத்துணவு சமையலர்களுக்கு கூட முட்டைக்கு பதிலாக வாழைப்பழம் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருப்பது தெரியாத நிலையிருக்கிறது. இது பற்றி சமூக நலத்துறையினர் கூறுகையில், ‘‘ பள்ளிகளில் வாழைப்பழம் சாப்பிடுவோர் விவரங்களை முறையாக தயார் செய்து ஒப்படைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Related Stories: