ஆர்வம் இருந்தும் விழிப்புணர்வு இல்லை 90% பேர் உடல் உறுப்புகள் கிடைக்காமல் சாவு: மருத்துவர்கள் தகவல்

சேலம்: தமிழகம் முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் காத்திருப்ேபார் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்தியாவில் மனித உடல் உறுப்பு தானம், 1962ம் ஆண்டே தொடங்கியது. ஆனால் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடக்கத் தொடங்கின. இதிலும் பண வசதி உள்ளவர்களுக்கு சாதகமாகவே நடந்து  கொண்டிருந்தது. இதனால் வசதியற்றவர்களும், வறியவர்களும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். 1994ம் ஆண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முறைப்படுத்தும் அகில இந்திய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது.தமிழகத்தில் 2008ம் ஆண்டு முதல் முறைகேடுகளை கட்டுப்படுத்த உடல் உறுப்பு தானத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது. 2000 ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரையிலும் உடல் உறுப்பு தானத்தில் மோசடிகள் பெரியளவில்  பல்கிப் பெருகியதால் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் மாற்று உடல் உறுப்புகள் பெறுவதற்கு என்று ஒரு பட்டியல் அரசால் பராமரிக்கப்படுகிறது. இதில் உடல் உறுப்பு தேவைப்படுபவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான்  அனைவருக்கும் எவ்வித பாகுபாடுமின்றி உடல் உறுப்புகளை பெற முடியும். இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என்று இரு தரப்புக்கும் பொருந்தும். மருத்துவமனையில் உறுப்பு தேவைப்படும் நிலையில் பாதிக்கப்படாத உறுப்புகளை   கேட்டு பெறுவதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உறுப்புமாற்று ஆணையம் உள்ளது. இந்த ஆணையம் உடல் உறுப்பு தானம் குறித்த  விழிப்புணர்வையோ, கலந்தாய்வையோ சரிவர மேற்கொள்வதில்லை என்ற புகாரும்  உள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம், ஆகஸ்ட் 13ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நம் உடலில் உள்ள குறிப்பிட்ட உறுப்புகளை உயிருடன் இருக்கும் போதோ  அல்லது இறந்த  பிறகோ பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சட்டங்கள், விதிகளுக்கு உட்பட்டு தானமாக வழங்கலாம். உறுப்பு தானம் என்பது வாழும்போது, இறப்புக்குபின், மூளைச்சாவு அடைந்தபின் என 3 பிரிவாக உள்ளது. ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை போன்றவற்றை தானமாக அளிக்கலாம். மேலும் ஒருவர் இறந்தபின் அவரது கண் விழித்திரை, எலும்பு மஜ்ைஜ, தோல், இதய வால்வுகள்  போன்றவற்றை அளிக்கலாம். மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கணையம், எலும்பு மஜ்ஜை, கண், தமனிகள், போன்றவற்றை தானமாக பெறலாம். ஒருவரிடம் பெறப்படும் உறுப்புகளைக் கொண்டு  9க்கும் மேற்பட்டவர்களை வாழ வைக்க முடியும்.சாலை விபத்துகள், நோய்கள் உள்ளிட்ட காரணங்களால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக  சுமார் 1.50 லட்சம் சிறுநீரகங்கள் தேவைப்படுகிறது. ஆனால் 3 ஆயிரம் சிறுநீரகங்கள் மட்டுமே  பெறப்படுகிறது.  சுமார் 25 ஆயிரம் பேருக்கு கல்லீரல் தேவைப்படும் நிலையில் சாராசரியாக 800 பேருக்கு மட்டுமே கிடைக்கிறது. காத்திருப்பவர்களில் 90 சதவீதம் பேர் உறுப்புகள் கிடைக்காமலே உயிரிழந்துவிடுகின்றனர்.உடல் உறுப்பு தானத்தில்  தமிழகம் முதலிடத்தில் இருந்தபோதும், போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலை தான் இன்னமும் உள்ளது. பலர் ஆர்வமாக இருந்தும் ஊக்கமளிக்க வேண்டியவர்கள் முன்வராத நிலையே உள்ளது.

தமிழகத்தில் 24 அரசு பொது  மருத்துவமனைகளில்  50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு  மாவட்டத்திலும் பல்வேறு பிரச்னைகளால் தினமும் சராசரியாக 20 முதல் 30 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று  புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.சாலை விபத்து மற்றும் வேறு காரணங்களால் உயிரிழக்கும் நபரின் குடும்பத்தினருடன் போதிய கலந்தாய்வு, மற்றும் ஆலோசனை செய்தால் உடல் உறுப்பு தானத்தில் 100 சதவீதம் வெற்றி பெற முடியும். இறப்புக்கு பின்னர் 5 பேருக்கு வாழ்க்கை  கிடைக்கும் என்ற விழிப்புணர்வு ெபாதுமக்களிடம் இல்லை. ஆரோக்கியமாக உள்ள அனைவரும் உறுப்பு தானம் செய்ய தகுதியானவர்கள்தான். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய், பால்வினைநோய், மஞ்சள் காமாலை போன்ற  நோய்களால் பாதிக்கப்பட்டோரிடமிருந்து உறுப்புகளை தானம் பெற முடியாது.

மாற்று சிறுநீரகத்துக்காக 5,500 பேர் காத்திருப்பு

உடல் உறுப்பு தானத்தில் உலகளவில் ஸ்பெயின் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முதலிடம் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,325 நபர்களிடம் இருந்து 7,779 உறுப்புகள்  தானமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5,600க்கும் மேற்பட்டவர்கள் உடல் உறுப்புகள் வேண்டும் என பதிவு செய்துள்ளனர். இதில் இதயம் மற்றும் நுரையீரலுக்கு 90க்கும் மேற்பட்டவர்களும், சிறுநீரகத்துக்கு 5,500க்கும் மேற்பட்டவர்களும்  காத்திருக்கின்றனர்.

Related Stories: