×

சென்னை மாநகரில் அதிக விபத்து நடைபெறும் 61 இடங்களில் தற்காலிக தடுப்பு நடவடிக்கை: டிச.31க்குள் முடிக்க திட்டம்

சென்னை: சென்னை மாநகரில் அதிக விபத்து நடைபெறும் 61 இடங்களில் தற்காலிக தடுப்பு நடவடிக்கையை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பு ஏற்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்த விபத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கடந்த 2017ல் 16,157 பேர் உயிரிழந்த நிலையில், கடந்தாண்டில் 12,216 ஆக உயிரிழப்பு குறைந்துள்ளது. தொடர்ந்து சாலை விபத்தை குறைக்கும்  வகையில் அதிக விபத்துக்கள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கட்டமைப்பு பணிகள் மேம்படுத்தப்படுகின்றன.   இந்த நிலையில் விபத்தில்லா சாலைகளை உருவாக்கும் பொருட்டு சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகர சாலைகள் கோட்ட அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சென்னை மாநகர காவல் போக்குவரத்து  உதவி ஆணையர்கள் சுரேந்திரநாத், ஹிட்லர், ஸ்டீபன், சென்னை மாநகராட்சி பேருந்து வழித்தட செயற்பொறியாளர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பரசு, சென்னை மாநகர சாலைகள் உட்கோட்டம் உதவி  பொறியாளர் ஆனந்தராஜ் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சென்னையில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க  மேற்கொள்ளப்பட வேண்டிய தற்காலிக மற்றும் நிரந்தர சாலை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் கண்டறியப்பட்ட அடிக்கடி  விபத்து நடக்க கூடிய பகுதிகளில் (பிளாக் ஸ்பாட்ஸ்) மேற்கொள்ளப்பட்ட தற்காலிக நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிரந்தர நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த விபத்து பகுதிகளை மேம்படுத்த போக்குவரத்து  காவல்துறை சார்பாகவும் சில கருத்துக்கள் மற்றம் ஆலோசனைகள் அளிக்கப்பட்டது. மேலும் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக கண்டறியப்பட்ட சாலைகளில் தற்காலிக நடவடிக்கைகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்கவும் இந்த  கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘சென்னை மாநகரில் சாட்டிலைட் உதவியுடன் 61 இடங்கள் அதிக விபத்து நடைபெறும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதில், 16 பகுதி சென்னை மாநகர சாலைகள்  நெடுஞ்சாலைத்துறையில் வருகிறது. இந்த விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் வேகத்தடை, தடுப்பு சுவர், எச்சரிக்கை பலகை, ஒளிரும் ஸ்டிக்கர், தேவையான இடங்களில் பாலங்கள் அமைக்கப்படுகிறது. தற்போது முதற்கட்டமாக அதிக  விபத்து நடைபெறும் இடங்களில் தற்காலிக விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றார்.

Tags : mosquitoes ,crashes ,accidents ,Most ,Chennai ,Chennai Temporary Detention ,locations , accidents , Chennai,locations,completed
× RELATED க.பரமத்தி மயான சாலையில் விபத்து ஏற்படுத்தும் பள்ளங்கள்