×

உணவூட்டு செலவீனம் 37% உயர்வு சத்துணவு திட்டத்திற்கு கூடுதலாக 48.43 கோடி நிதி

சென்னை: ‘’தினகரன்’’ செய்தி எதிரொலியால் சத்துணவு திட்டம் உணவூட்டு செலவினம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கான கூடுதல் செலவிற்கு ₹48.43 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்தக் கூடாது என்பதற்காகவும், பள்ளிக்கு மாணவர்கள் வருகையை ஊக்கப்படுத்தவும் இலவச மதிய உணவுத் திட்டத்தை, கடந்த  1955ம் ஆண்டு காமராஜர் கொண்டு வந்தார். பின்னர், எம்ஜிஆர்  சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் 1982ம் ஆண்டு, ஊரகப் பகுதியில் உள்ள பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டு, நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.பிறகு 1984ம் ஆண்டு 15 வயது வரைக்கும் என நீடிக்கப்பட்டது. இப்போது, 10ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. 1989ம் ஆண்டு சத்துணவில் முட்டை வழங்கும் திட்டமும், 2001ம் ஆண்டு பயறு  வகைகள், உருளைக் கிழங்கு, 2013ம் ஆண்டு வாரத்தில் நான்கு நாட்கள் கலவை சாதம், ஒரு நாள் சாம்பார் சாதமும் வழங்குகிறது.அதோடு, தினசரி ஒரு முட்டை, வாரத்தில் ஒருநாள் கொண்டைக்கடலை அல்லது பச்சைப்பயறு 20 கிராம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 44 ஆயிரம் சத்துணவு மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், 60 லட்சம் மாணவ,  மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கும் உணவு வழங்கப்படுகிறது.

சத்துணவு மையங்களில் நபர் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எரிபொருள் செலவு, மளிகை செலவு, காய்கறி செலவு ஆகியவற்றை சேர்த்து 1.30 காசு, 6 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு காய்கறி 80 பைசா, மளிகை 40 பைசா,  விறகு 48 பைசா என கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1.70 காசு வழங்கப்படுகிறது. கலவை சாதத்துக்கு காய்கறி வகைகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், பல்லாரி, உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மல்லி, வத்தல், கடுகு, புளி, வெந்தயம், சீரகம், காயம், மிளகு போன்ற மளிகைப்  பொருள்களைப் பயன்படுத்தி, கலவை சாதம் தயாரித்து வழங்க வேண்டும். சந்தையில் காய்கறி, மளிகைப் பொருள்களின் விலை ஏற்றத் தாழ்வுடன் காணப்படுவதால் அரசு வழங்கும் மானியம் போதுமானதாக இல்லை.ஒரு மாணவனுக்கு காய்கறி, மளிகைப் பொருள்கள், எரிபொருள் என குறைந்தது 3 வழங்கினால்தான் தரமான சத்துணவு வழங்க முடியும் என, கடந்த 24ம் தேதி ‘’தினகரன்’’ நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, உணவூட்டு  செலவினத்தை, 37 சதவீதம் உயர்த்தி வழங்கும்படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இயக்குனர், அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுள்ள அரசு, இதற்கான கூடுதல் செலவிற்கு, 48.43 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

Tags : Food costs ,rise 37%, Nutrition, Program
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...