உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிட முடிவு: பாஜ கூட்டணியில் நீடிப்பதில் சிக்கல், மூன்று கட்சிகள் கழற்றிவிடப்பட்டன

சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பெரும்பாலான இடங்களில் அதிமுக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்ததால், இழுபறி ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் உள்ள குளறுபடி தொடர்பாக திமுக  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து 9 மாவட்டங்களை தவிர்த்து மீதியுள்ள மாவட்டங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்துவிட்டு தேர்தல் நடத்தலாம் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுபோன்ற  காரணங்கள், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இப்போதைக்கு நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இது ஒரு பக்கம் இருந்தாலும், ஆளும் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் நேற்று முன்தினம் திடீரென பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் பாமக, பாஜ, தேமுதிக, தமாக கட்சிகள் சார்பில்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கட்சிகளுடன், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகள், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்ததுடன், எந்தெந்த இடங்களில் போட்டியிட விரும்புகிறோம் என்பதற்கான பட்டியலும் அளித்தனர். ஆனால்  அதிமுக தலைமை சார்பில், கூட்டணி கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்ற தகவலை உறுதியாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அதிமுகவே போட்டியிட  விரும்புகிறது. நேற்று முன்தினம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் அனைவரும்  இதையே வலியுறுத்தினர். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடம் வழங்க முடியாது என்பதை தெரிவித்துவிட்டோம். குறிப்பாக, பாஜ சார்பில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகம் முழுவதும் தங்கள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் நாகர்கோவில், கோவை உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே அவர்களுக்கு செல்வாக்கு உள்ளது. அந்த  மாவட்டங்களில் மட்டும் அவர்களுக்கு சீட் வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. அதனால், அதிமுக தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதேபோன்று பாமக, தேமுதிக கட்சிகளுக்கும்  வடமாவட்டங்களில் அவர்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் மட்டுமே சீட் வழங்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்தந்த அதிமுக மாவட்ட பொறுப்பாளர்களிடம் பேசி முடிவு செய்ய கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம்  வலியுறுத்திள்ளோம். கூட்டணி கட்சிக்கு எவ்வளவு இடம் வழங்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள்தான் இறுதி முடிவு எடுத்து தலைமைக்கு அனுப்புவார்கள். தமாகாவை பொறுத்தவரை, கொடுக்கும் இடங்களை வாங்கிக்  கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.அதேபோன்று மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சிகளுக்கு எங்கள் கூட்டணி சார்பில்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட மாட்டாது என்றார்.

அதிமுகவின் இந்த முடிவு, கூட்டணி கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிமுக கட்சி அலுவலகத்தில் வைத்து பேட்டி அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “உள்ளாட்சி தேர்தல்  குறித்த பேச்சுவார்த்தைக்கு திடீரென அதிமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தை கலந்து கொண்டு எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். தேர்தலில் அனைத்து கூட்டணி கட்சிகளும் இணைந்து செயல்படுவது குறித்து பேசினோம்”  என்றார்.பின்னர் வெளியே சென்று பேட்டி அளித்த அவர், “பேச்சுவார்த்தையில் அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை” என்று தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து  மாவட்டங்களில் போட்டியிட பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை பாஜ தனித்து சந்திக்கும் என்ற ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க அதிமுக தலைமை, பாஜ தேசிய செயல்  தலைவர் ஜே.பி.நட்டாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தமிழக பாஜ தலைவர்களை பிரசாரத்துக்கு கூட அழைக்காமல் அதிமுக தலைமை புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

அதேநேரம், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 பேர் குழுவும் பாஜ சார்பில் நியமிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா, நடைபெறாதா என்ற குழப்ப நிலை நீடிக்கும்போதே அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் அறிவிக்கப்படும்பட்சத்தில் இந்த  கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்படும் என்றே அதிமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் கூறுகிறார்கள்.தமிழகத்தில்உள்ளாட்சி தேர்தலை பாஜ தனித்துசந்திக்கும் என்ற ஒரு பேச்சு எழுந்துள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க அதிமுக தலைமை, பாஜ தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories:

>