எச்சரிக்கை மணி பொருத்தப்படாமல் கோயில்களில் திருட்டு நடந்தால் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: கமிஷனர் பணீந்திரரெட்டி எச்சரிக்கை

சென்னை: களவு எச்சரிக்கை மணி பொருத்தப்படாமல் இருந்து கோயில்களில் திருட்டு நடந்து இருப்பது தெரிய வந்தால் செயல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 44,121 கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான ேகாயில்கள் அடக்கம். இக்கோயில்களுக்கு சொந்தமாக விலைமதிப்புமிக்க பொருட்களை சமூக விரோதிகள்  கொள்ளையடித்து செல்வதாக கூறப்படுகிறது. இதற்கு, கோயில்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே முக்கிய காரணம். இந்த நிலையில் சிலை, உண்டியல்களில் களவு எச்சரிக்கை மணி பொருத்த உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இத்துறை ஆளுகையின் கீழ் பட்டியலை சேர்ந்த மற்றும் பட்டியலை சேராத  கோயில்களில் சிலைகள் மற்றும் விலைமதிப்பில்லாத பொருட்கள் களவு போவதை தடுப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து பல்வேறு சுற்றறிக்கைகள் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பபட்டுள்ளன. இருப்பினும் களவு தொடர்பான  அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

நிதியுதவி கோரி முன்மொழிவுகள் வரப்பெறவில்லை. எனவே, தங்களது ஆளுகையின் கீழ் உள்ள பட்டியலை சேர்ந்த பட்டியலை சேராத நிதிவசதி இல்லாத கோயில்கள் அனைத்திற்குள் களவு எச்சரிக்கை  மணி பொருத்தப்படாமல் உள்ள கோயில்களில் உடனடியாக களவு எச்சரிக்கை மணி பொருத்த நடவடிக்கை எடுக்கவும், நிதிவசதியற்ற கோயில்களில் நிதியுதவி தேவைப்படும் கோயில்களுக்கு களவு எச்சரிக்கை மணி மைய நிதியின் வட்டியில்  இருந்து நிதியுதவி பெற்று களவு எச்சரிக்கை மணி பொருத்துவற்கு முன்மொழிவினை பெற்று அனுப்ப அனைத்து இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை செயல்படுத்த தவறும் பட்சத்தில்  தங்களது மண்டலத்தில் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்படாமல் இருந்து களவுகள் ஏதேனும் நடைபெற்றது என தெரியவந்தால் தொடர்புடைய சார்நிலை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து  கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: