தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பயிர்காப்பீடு பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வு: வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் பயிர் காப்பீடு குறித்து விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தபபட்டுள்ளது. தமிழகத்தில் உணவு தானியங்களின் உற்பத்தி சுமார் 104.02 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உள்ளது. தற்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களை நெல் பயிற்களை  பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மழை கனமழை ெபய்து வருகிறது.  இதனால் வயல்வெளிகளில் நடப்பட்டுள்ள நெல் பயிர்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பயிர்காப்பீடு குறித்து விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது மழை பெய்து வருவதால், வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கும், கள பணியாளர்களுக்கும் விவசாயிகளிடத்தில் சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதன்படி வயலில் தேங்கும்  நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவினை ஒருநாள் இரவு கலந்துவைத்து 17 கிலோ பொட்டாஷ்  கலந்து மேலுரமிட வேண்டும்.

நெல் பயிர் அதிக நாட்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில் பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இளம் பயிர்களில் தண்ணீர் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருப்பின் இருப்பில் உள்ள நாற்றுக்களை கொண்டு ஊடு நடவு செய்ய வேண்டும் அல்லது அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரினை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்திட  வேண்டும்.  தண்ணீர் தேங்கக்கூடிய இடங்களில் தண்ணீர் தேக்கத்தினை தாங்கி வளரக்கூடிய ரகங்களான சுவர்ணா சப்1, சிஆர் 1009 சப்1 போன்ற இரகங்கள் நடவு செய்திட விவசாயிகளை கேட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இதுதவிர  இயற்கை இடர்பாடுகளினால் பயிர் சேதத்தினை ஈடு செய்திட பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திடலாம். அரியலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், நாமக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு செய்திட டிசம்பர் 15 வரை கால அளவு உள்ளது. எனவே இதுதொடர்பாக  உடனடியாக விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பீடு செய்திடவும், மழைநேரத்தில் பயிர்களை காப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுத்திட கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: