நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக சேலம் ஐபிஎஸ் அதிகாரி கண்காணிக்கும் அந்தமான் போலீஸ் ஸ்டேஷன் தேர்வு: மத்திய அரசின் விருதை அமித்ஷா வழங்கினார்

சென்னை: தெற்கு அந்தமானின் அபர்தீன் காவல் நிலையம் நாட்டிலேயே சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்வு செய்யபட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரியான மனோஜின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலையத்துக்கு மத்திய அரசு  கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.தெற்கு அந்தமான் மாவட்டத்தின் அபர்தீன் காவல் நிலையத்தை நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த டிஜிபிக்கள் ஆலோசனை கூட்டத்தில் அந்த  காவல்நிலையத்தின் எஸ்பி மனோஜ், இன்ஸ்பெக்டர் சஞ்சய்குமாரை பாராட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோப்பையை வழங்கினார். போலீஸ் டிஜிபி தீபேந்தர பதக்கின் தொடர் பணிகள், எஸ்பி மனோஜின் அர்ப்பணிப்பு மூலம் இந்த சாதனை சாத்தியமானது என்று அந்தமான் போலீசார் தெரிவித்துள்ளனர்.தெற்கு அந்தமானின் அபர்தீன் காவல்நிலையம் மிகவும் பரபரப்பான காவல் நிலையங்களில் ஒன்று. அப்பகுதியில் நிலவிய பல்வேறு பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வந்ததில் இந்த காவல்நிலையத்தின் பங்கு மகத்தானது.

விருது கிடைத்தது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:தெற்கு அந்தமான் எஸ்பி மனோஜின் ஒட்டுமொத்த கண்காணிப்பால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொதுமக்களுடன் இணைந்து குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்க எஸ்பி எடுத்த முன்னெடுப்பு, அதற்காக மேற்கொண்ட  விழிப்புணர்வு மிக முக்கியமானது. பொதுமக்களே தங்கள் பகுதியின் பாதுகாவலர்கள் என்பதை புரிய வைத்ததால், இப்போது பொதுமக்களே தங்கள் பகுதியை கண்காணிக்கின்றனர். அதனால் நாட்டின் உயரிய விருது கிடைத்துள்ளது. அதேபோல்  எஸ்பி மனோஜின் தலைமைபண்பால்  நிகோபார் மாவட்டத்தின் கேம்ப்பெல் பே காவல்நிலையம் 2018ம் ஆண்டுக்கான  சிறந்த காவல் நிலையம் என்ற விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் அந்தமான் பகுதிக்கு மாற்றப்பட்டு,  அங்கும் 2வது விருதை பெற்றுள்ளார். இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.விருது பெற்ற காவல் நிலையத்தின் எஸ்.பி.யான மனோஜ், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா வங்கி அதிகாரி. தாய் இல்லத்தரசியாக உள்ளார். முன்னதாக மனோஜ் டெல்லியில் பணியாற்றினார். தற்போது  அந்தமான், நிகோபார் தீவுகளில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: