லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளர்கள் மீண்டும் பதிவுப்பணியில் நியமனம்: ஐஜி விடுமுறையில் உள்ள நேரத்தில் பணி மாற்றியிருப்பதால் சர்ச்சை

சென்னை: லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி பணியிட மாற்றம் செய்யப்பட்ட சார்பதிவாளர்கள் மீண்டும் பதிவுப்பணியில் நியமனம் செய்யப்பட்டிருப்பது பதிவுத்துறையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான ஐஜி விடுமுறையில் உள்ள  நிலையில் பணிமாற்றம் செய்திருப்பது அந்த துறையில் பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில் ஒரு சில சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக  கூறப்படுகிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி லட்சக்கணக்கிலான பணம் சார்பதிவாளர் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரையின் பேரில் பதிவுப்பணியில் இருந்த சார்பதிவாளர்கள் பதிவு இல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீதான விசாரணை முடிந்த பிறகு, குற்றம் நிரூபிக்கப்படாத  பட்சத்தில் மட்டுமே அவர்களை பதிவுப்பணிக்கு நியமிக்க வேண்டும். அல்லது குறைந்தது ஓராண்டாவது பதிவு இல்லாத பணியில் இருக்க வேண்டும். விசாரணை நிலுவையில் இருந்தால் பதிவுப்பணிக்கு நியமிக்கப்படக்கூடாது.ஆனால் கடந்த காலங்களில் பல பதவிகள் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய அதிகாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் கடந்த சில மாதங்களாக பணி மாறுதல்கள் நிறுத்தி  வைக்கப்பட்டன. பின்னர் பதிவுத்துறை ஐஜியாக நேர்மையான அதிகாரி ஜோதி நிர்மலா நியமிக்கப்பட்டார். அவர் விடுமுறையில் உள்ள நேரங்களில் பணம் வாங்கிக் கொண்டு அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளன.

 தற்போது விசாரணை நிலுவையில் உள்ள ஒரு சில சார்பதிவாளர்கள் பதிவு இல்லாத பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் திடீரென மேலிடத்தின் அழுத்தம் மற்றும் பல லகரங்கள் மாறியதன்  காரணமாக அந்த சார்பதிவாளர்களுக்கு பதிவுப்பணிக்கு நியமனம் செய்து பதிவுத்துறை பொறுப்பு ஐஜி உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, சிதம்பரம் சார்பதிவாளர்(வழிகாட்டி) சுமதி திருவள்ளூர் சார்பதிவாளர், புதுக்கோட்டை சீட்டு மற்றும் சங்க சார்பதிவாளர் மீனாட்சி அம்பத்தூர் சார்பதிவாளர், சாத்தான் குளம் சார்பதிவாளர் ஜெயபிரகாஷ், ஒட்டப்பிடாரம் சார்பதிவாளர், அன்னியூர் சார்பதிவாளர்  சந்திரகுமார் மதுராந்தகம் சார்பதிவாளர், திட்டக்குடி சார்பதிவாளர் கலைச்செல்வி, கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் (சீட்டு மற்றும் சங்கம்), காஞ்சிபுரம் 2ம் எண் இணை சார்பதிவாளர் பகவதி செல்வி பர்கிட் மாநகர்(நெல்லை) சார்பதிவாளராக பணியிட  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பகவதி செல்வி மட்டுமே பதவி உயர்வில் பணி மாற்றம் செய்யப்பட்டு நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மற்ற அனைவர் மீதும் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் சுமதி, திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டையில் பணியாற்றியபோது 1500க்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்திருந்தார். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால், அவர் அதிரடியாக  மாற்றப்பட்டார். தற்போது 4 மாதங்கள் மட்டுமே முடிந்தநிலையில் அவர் நீதிமன்ற உத்தரவை மீறி திருவள்ளூர் சார் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மீனாட்சி ஆவடி பதிவாளராக பணியாற்றியபோது, லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கினார். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் புதுக்கோட்டைக்கு பதிவுத்துறை அல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார்.  தற்போது அவர் மீண்டும் பதிவுத்துறை பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜெயப்பிரகாஷ், சந்திரகுமார், கலைச்செல்வி ஆகியோர் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டு மற்றும் லஞ்ச ஒழிப்பு விசாரணையில் உள்ளவர்கள் என்று  கூறப்படுகிறது. அதில் 6 பேரில் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை, வழக்கு மற்றும் துறை ரீதியிலான விசாரணை உள்ள நிலையில் அவர்கள் பதிவு அல்லாத பிரிவில் இருந்து வளம் கொழிக்கும் பதிவுத்துறைக்கு  மாற்றப்பட்டுள்ளனர். அதில் சுமதி நியமிக்கப்பட்டுள்ள திருவள்ளூரில்தான் தமிழகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் பகுதியாகும்.

 இதைவிட மோசமான நடவடிக்கையாக, சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமாக மாடம்பாக்கத்தில் உள்ள ₹350 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை வேறு நபர்களுக்கு பதிவு செய்து கொடுத்ததாக பதிவாளர் விவேகானந்தன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. தற்போது அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு, மதுரை பதிவுத்துறையில்  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலா, தனது மகன் திருமணத்திற்காக விடுமுறையில் உள்ளார். அவரது பொறுப்பு, அந்த துறையின் செயலாளர் பாலச்சந்திரனிடம் உள்ளது. இவ்வளவு குற்றச்சாட்டுகள் உள்ள 6 பேரை, சர்ச்சைக்குரிய  பதிவுத்துறைக்கு மாற்றி, அவர்களது தண்டனைகளை ரத்து செய்து, லஞ்சத்தில் ஊறித் திளைக்கும் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரப்பதிவுத்துறையில் பதிவு பதவிகளுக்கு ₹40 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை கோட்டையில் உள்ள அதிகாரிகளும், ஆளும் வர்க்கத்தினரும் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவ்வாறு பல பதவிகள் நிரப்பப்பட்டதாகவும்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தற்போது, பதிவுத்துறை ஐஜி விடுமுறையில் இருக்கும்போது, தண்டனைகளை ரத்து செய்து விட்டு புதிய பணியிடங்களை வழங்குவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த துறையின்  செயலாளராக உள்ள பாலச்சந்திரன் ஓய்வு பெறுவதற்கு ஒரு சில மாதங்களே உள்ளன. இந்தநிலையில் அவர் தண்டனைகளை ரத்து செய்வது, குற்றச்சாட்டுகளில் உள்ளவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவது போன்ற நடவடிக்கைகளில்  ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் சமீப காலங்களில் அவர் பத்திரப்பதிவு ஐஜி இல்லாமல் பணி மாற்றம் மற்றும் தண்டனை ரத்து உள்ளிட்ட நடவடிக்களை லஞ்ச ஒழிப்பு மற்றும் விஜிலன்ஸ் பொறுப்பாளராக உள்ள  தலைமைச் செயலாளர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஊழல் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிய தலைமை அலுவலகம்

பதிவுத்துறையில் உயர் பதவியில் உள்ள ஒரு உயர் அதிகாரியும், அமைச்சரின் அலுவலகத்தில், நடிகர் சத்யராஜ் நடித்த அமைதிப்படையின் இயக்குநரானவரின் பெயரைக் கொண்ட உதவியாளரும் சேர்ந்து பல உத்தரவுகளை பிறப்பிப்பதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் உதவியாளர் அமைச்சர் ஒரு பணி மாற்றம் கொடுத்தால், அதோடு சேர்த்து தனக்கு வேண்டியவர்களுக்கும் சேர்த்து உத்தரவுகளை போடுவதாகவும், அதில் அந்த துறையின்  உயர் அதிகாரியும், உதவியாளரும் கூட்டணி அமைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள பதிவுத்துறை ஊழல் குற்றவாளிகளின் புகலிடமாக மாறிவிட்டதாகவும், பணம் உள்ளவர்கள் மட்டுமே அந்த  அலுவலகம் வழியாக நடக்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: