×

சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து புது அட்டவணை ஊராட்சிகளுக்கு டிச.27, 30ல் தேர்தல்

* பழைய அட்டவணையில் மாற்றம் இல்லை * 9 மாவட்டம் தவிர்த்து 27 மாவட்டங்களில் வாக்குப்பதிவு * நாளை மனு தாக்கல்

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் 9 மாவட்டங்களை  தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 27ம்  தேதி மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக 91,975 பதவியிடங்களுக்கான ஊரக  உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம்  நேற்று மீண்டும் அறிவித்துள்ளது. வழக்கம்போல மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சிக்கு பின்னர் தேர்தல் நடத்தப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகிறது.

உச்ச  நீதிமன்றம் அறிவுரையை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 27 மற்றும்  30ம் தேதி சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு  மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த 2ம் தேதி மாநில தேர்தல் ஆணையர்  அறிவித்தார். ஆனால், தமிழகத்தில் வார்டு வரையறை, இடஒதுக்கீடு சரியாக  பின்பற்றப்படவில்லை. 5 புதிய மாவட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல் அறிவிப்பு முறைகேடாக உள்ளது என்று திமுக சார்பில் உச்ச  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 9  மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வார்டு வரையறை, இடஒதுக்கீடுகளை  சரியாக பின்பற்றி தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும்,  ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வழங்கிய அறிவிப்பாணையை ரத்து செய்தும்  நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், 9 மாவட்டங்களை  தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு ஏற்கனவே  அறிவித்தபடி டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து  மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நேற்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள  தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம்  நேற்று முன்தினம் வழங்கிய ஆணையின்படி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி  அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய  27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்  நடைபெறும். இதற்கான தேர்தல் அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால்  நாளை (9ம் தேதி) வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் 9ம் தேதி (நாளை) காலை  10 மணி முதல் துவங்கும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் வருகிற  16ம் தேதி ஆகும்.

17ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 19ம்  தேதி வரை வேட்புமனுக்களை திருப்ப பெறலாம். முதல்கட்ட வாக்குப்பதிவு வருகிற  27ம் தேதியும் 2ம் கட்ட வாக்குப்பதிவு 30ம் தேதியும் நடைபெறும்.  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணியுடன் முடிவடையும். வாக்கு  எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி வார்டு  உறுப்பினர்கள், தலைவர்கள் ஜனவரி 6ம் தேதி பதவி ஏற்றுக் கொள்வார்கள். அதன்படி,  தமிழகத்தில் மொத்தம் உள்ள 91,975 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை  நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறுகிறது. இதில், 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு  உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 314 ஊராட்சி  ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்  பதவியிடங்கள், 9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்கள் மற்றும் 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

கிராம  ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்  பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி  வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான  தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும். முதல் கட்டத்தில் 156 ஊராட்சி  ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்  பதவியிடங்களுக்கும், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்  பதவியிடங்களுக்கும், 4,700 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும்,  37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி  வாக்குப்பதிவு நடைபெறும்.

2வது கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு  உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,544  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 4,924 கிராம ஊராட்சி  தலைவர் பதவியிடங்களுக்கும், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்  பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். முதல்கட்ட  வாக்குப்பதிவு 24,680 வாக்குச்சாவடிகளிலும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 25,008  வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகள்  மாநிலம் முழுவதும் சென்னை மற்றும் 9 புதிய மாவட்டங்கள் என 10 மாவட்டங்களை  தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களிலும் உள்ள 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு  உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வருகிறது.  மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர்  அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

4 கலரில் வாக்குச்சீட்டு
ஊரக  உள்ளாட்சி தேர்தலுக்காக 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். 2 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறுத்திலும், மற்றொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

எந்த மாற்றமும் இல்லை ஆணையம் மீது அதிருப்தி
9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் வார்டு வரையறை, இடஒதுக்கீடுகளை முறையாக அறிவித்து தேர்தல் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. நீதிமன்றம் அறிவித்தபடி 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்காமல்,  கடந்த 2ம் தேதி வெளியிட்ட அட்டவணையையே மாநில தேர்தல் ஆணையம் நேற்று  மீண்டும் அப்படியே அறிவித்துள்ளது. இதில் வேட்புமனு தாக்கல் 6ம் தேதி  என்பதை 9ம் தேதி என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய 13ம் தேதி கடைசி நாள்  என்பதை 16ம் தேதி என்று மட்டுமே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மற்றபடி  வாக்குப்பதிவு நாள், வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு என்பது உள்ளிட்ட எந்த மாற்றமும் செய்யாதது அனைவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.


Tags : Elections ,Supreme Court , Supreme Court, following order, new schedule, panchayats, Dec. 27, 30th
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...