புழல் ஏரி கால்வாய் உடைப்பு: ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம்

புழல்: புழல் ஏரிக்கு கால்வாய் பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரிசெய்யவேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர். சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரி நிரம்பியதும் உபரிநீர், இங்குள்ள கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு திறந்துவிடப்படும். சமீபத்தில் பெய்துவரும் மழையால் சோழவரம் ஏரி நிரம்பி உள்ளதால் அதன் உபரிநீரை இங்குள்ள கால்வாய் மூலம் சில நாட்களாக புழலேரிக்கு திறந்து விடப்படுகிறது. இந்த நீர் நல்லூர், விஜயநல்லூர், ஆட்டந்தாங்கல் மற்றும் எம்ஜிஆர் நகர் பாலகணேசன் நகர் வழியாக ஆலமரம், திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியாக கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு  சென்று சேருகிறது.

இந்த நிலையில், புழல் ஏரிக்கு கொண்டுசெல்லப்படும் கால்வாயில் சுமார் 3 கிமீ தூரமுள்ள கரைகள் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, நல்லூர் பகுதியில் உள்ள கால்வாயின் கரை சுமார் 5 அடி தூரத்துக்கு முற்றிலும் உடைந்து காணப்படுகிறது. இதனால் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளது. எனவே, சோழவரம் ஏரியின் கால்வாய் கரை பகுதிகளை பொதுப்பணி துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அதன் கரைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இதன்மூலம் சோழவரம் ஏரியின் நீர் புழல் ஏரிக்கு சீராக செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: