×

மணிமுத்தாறில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம்: வீட்டில் புகுந்து ஆட்டை கடித்து குதறிய கொடூரம்

அம்பை: மணிமுத்தாறில் வீட்டில் அடைத்து வைத்த ஆடுகளை பிடித்து கொன்று தின்று அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை, யானை, கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விளைநிலங்களில் சேதப்படுத்துவதும் வீடுகளில் கட்டி போட்டிருக்கும் ஆடு, நாய் போன்ற கால்நடைகளை கொன்று காட்டுக்குள் இழுத்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

மணிமுத்தாறு  பொதுப்பணித்துறை அண்ணாநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த ஆக.8ந்தேதி இப்பகுதியைச் சேர்ந்த ராமர்(60) என்பவர் வீட்டு தொழுவத்தில் அடைத்து போட்டிருந்த சுமார் 8 ஆடுகளை நாள்தோறும் ஒன்றுவீதம் வீட்டில் புகுந்த சிறுத்தை கொன்று வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. மேலும் நாய்களை யும் வேட்டையாடியது. இதையடுத்து வனத்தையொட்டி பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைத்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் முண்டன்துறை பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. சிறுத்தை பிடிபட்டதால் பொதுமக்கள் தற்காலிகமாக நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் தற்போது மணிமுத்தாறு குடியிருப்பு பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட்டுள்ளனர். அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராமர் வீட்டில் சிறுத்தை புகுந்த சம்பவத்தில் மீதமுள்ள 3 ஆடுகளை, டைமன்ட் வடிவிலான கூண்டு அமைத்து கண்காணித்து வந்தார். இன்று அதிகாலை வீட்டில் புகுந்த சிறுத்தை, கூண்டில் இருந்த ஒரு ஆட்டை கடித்து குதறி கொன்றுள்ளது. கூண்டு வலுவாக இருந்ததால் ஆடு உடலை வெளியே இழுத்து கொண்டு செல்ல முடியாததால் ஆட்டை ருசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளது. சிறுத்தையின் அட்டகாசத்தில் மற்ற 2 ஆடுகள் மயிரிழையில் உயிர்தப்பியது.

இன்று காலை ராமர் மற்றும் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது ஒரு ஆடு, சிறுத்தை தாக்கியதில் இறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால்தடம் பதிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே கூண்டு வைத்து சிறுத்தை பிடிபட்ட நிலையில் தற்போது மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வனத்துறை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுத்தை போன்ற வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை பிடித்து  செல்வதை தடுக்க கூண்டு வைத்து பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bell, back, leopard attack, home bite, goat bite
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்