நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி: பொன்னமராவதியில் நீண்டகாலமாக மூடிக்கிடக்கும் விசைத்தறியினை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வந்தனர். ஒரு சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் திடீர் என இவை மூடப்பட்டது. மூடப்பட்டதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. இதனால் விசைத்தறி இயக்கி வந்தவர்கள் வேலை இழந்ததால் படிப்படியாக மாற்றுப்பணிக்கு சென்றுவிட்டனர். அதையடுத்து இங்கு இருந்த மிஷின்களை ஏலம்விடப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் இந்த கட்டிடம் பாழடைந்து கிடக்கின்றது.

பொன்னமராவதி பகுதியில் 100 பேர் வேலை செய்யும் எந்த தொழிற்சாலைகளும் இல்லாத வேளையில் இந்த விசைத்தறியில் அதிக அளவு தொழிலாளர்கள் வேலை செய்யவாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் மூடப்பட்டுள்ளது. இந்த விசைத்தறியினை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர யாரும் முயற்சி செய்யவில்லை. எனவே தமிழக அரசு இந்த விசைத்தறிக்கூடத்தை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்து 100க்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: