சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் மாற்றுப்பாதை அமைக்காமல் பாலம் அமைக்கும் பணி: போக்குவரத்துக்கு பக்தர்கள் அவதி

வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மாற்றுப்பாதை அமைக்காமல், பாலப் பணி நடந்து வருவதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை விலக்கு மற்றும் லிங்கம் கோயில் வழியாக வண்டிப்பண்ணைக்கு சென்று, அங்கிருந்து சதுரகோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சென்று வந்தனர். இந்நிலையில், லிங்கம் கோயில் அருகில் இருந்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு பெரியபாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

ஆனால், மாற்றுப்பாதை அமைக்காததால், குறுகிய இடத்திற்குள் ஆட்டோ, டூவிலர் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றனர். மழை காலங்களில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது டூவீலர், ஆட்டோ செல்ல

முடிவதில்லை. பாலம் வேலை தொடங்கியதால் பஸ்கள், வேன்கள் மகாராஜபுரம் வழியே 8 கிலோ மீ சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், பாலம் வேலையும் மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால், விசேஷ காலங்களில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பாலத்திற்கு உடனடியாக மாற்றுப்பாதை அமைக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: