சொந்த செலவில் வாய்க்கால் அமைத்து வீணாக சென்ற உபரி நீரை ஏரியில் நிரப்பும் விவசாயிகள்

காரிமங்கலம் :  காரிமங்கலம் அருகே விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் சுமார் 1 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து, வீணாக சென்ற உபரி நீரை ஏரிக்கு கொண்டு வந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சோமலிங்க ஐயர் ஏரி (பெரிய ஏரி) உள்ளது. இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஆனால், அருகாமையிலுள்ள கொண்டிசெட்டிபட்டி குறவன் ஏரிக்கு, தண்ணீர் வரும் வாய்க்கால் சேதமடைந்து இருப்பதால், தண்ணீர் வீணாகி கொண்டிருந்தது. இதையடுத்து, கொண்டிசெட்டிபட்டி, புதுக்குடியானூர், குட்டூர் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒன்றுசேர்ந்து, பெரிய ஏரியில் இருந்து கொண்டிசெட்டிப்பட்டி ஏரிக்கு, சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு, தங்களது சொந்த செலவில் வாய்க்கால் வெட்டி, வீணாக செல்லும் தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.

சுமார் 16 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரியில், தண்ணீரை கொண்டு வருவதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதியும், நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அரசை எதிர்பார்க்காமல் விவசாயிகள் தாங்களே களத்தில் இறங்கி, வாய்க்கால் அமைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்த விவசாயிகளை இப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பெரிய ஏரியில் இருந்து உபரி நீரை, கொண்டிசெட்டிப்பட்டி ஏரிக்கு கொண்டு வர, வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டும்  என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதிகாரிகள் நிதி இல்லை என கூறி விட்டனர். எனவே, இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் சுமார் ₹68 ஆயிரம் நிதி திரட்டி, பொக்லைன் மூலம் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தோம் ,’ என்றனர்.

Related Stories: